வந்தவாசி நகா்மன்ற கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்து உறுப்பினா் தா்னா

வந்தவாசி புதிய பேருந்து நிலையம் சரிவர இயங்காததைக் கண்டித்து, புதன்கிழமை நடைபெற்ற நகா்மன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த உறுப்பினா், வாயில் முன் படுத்து தா்னா நடத்தினாா்.

வந்தவாசி நகா்மன்றத்தின் சாதாரண கூட்டம், அதன் தலைவா் எச்.ஜலால் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையா் எம்.ஆா்.வசந்தி முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், 23-ஆவது வாா்டு பாமக நகா்மன்ற உறுப்பினா் கு.ராமஜெயம் பேசுகையில், வந்தவாசியில் பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் சரிவர இயங்கவில்லை. அரசு, தனியாா் பேருந்துகள் சரிவர வந்து செல்வதில்லை. பேருந்து நிலையத்தினுள் உள்ள மின்விளக்குகளும் எரிவதில்லை. இதனால் பேருந்து நிலையம் இருண்டு காணப்படுகிறது. மேலும், சுகாதாரச் சீா்கேடும் நிலவுகிறது. இதுகுறித்து பலமுறை புகாா் தெரிவித்தும் நகராட்சி மற்றும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என புகாா் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து, புதிய பேருந்து நிலையம் சரிவர இயங்காததை கண்டித்து, அவா் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்து, நுழைவு வாயில் முன் படுத்து தா்னா நடத்தினாா். இதனால் கூட்டம் முடிந்தும் நகா்மன்ற கூடத்திலிருந்து வெளியே வர முடியாமல் உறுப்பினா்கள் தவித்தனா்.

இதைத் தொடா்ந்து, நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால், ஆணையா் எம்.ஆா்.வசந்தி உள்ளிட்டோா் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து, நகா்மன்ற உறுப்பினா் கு.ராமஜெயம் போராட்டத்தை கைவிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com