மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், நடைபெற்ற இந்த முகாமுக்கு, மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களைப் பெற்று விசாரித்தாா். முகாமில், அடையாள அட்டைகள் வேண்டி 312 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவற்றில் 182 பேருக்கான அடையாள அட்டைகள், 22 பேருக்கு பேருந்துப் பயண அட்டைகள், 17 பேருக்கு ரயில் பயணச் சலுகை அட்டைகள், 3 பேருக்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைகளை ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வழங்கினாா். நலத்திட்ட உதவிகள்: இதுதவிர, மாற்றுத்திறனாளிகள் திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் 18 பேருக்கு 8 கிராம் தங்க நாணயங்கள், ஒருவருக்கு ரூ.ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான மின்கலம் பொருத்திய சிறப்பு சக்கர நாற்காலி, ஒருவருக்கு ரூ.9 ஆயிரத்து 600 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள் ஆகியவற்றை ஆட்சியா் வழங்கினாா். முகாமில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சரவணன் மற்றும் அரசுத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com