கலசப்பாக்கத்தை அடுத்த நாயுடுமங்கலம் கூட்டுச் சாலை அருகே அக்னி கலச சின்னத்தை வியாழக்கிழமை நிறுவிய வன்னியா் சங்கத்தினா், பாமகவினா்.
கலசப்பாக்கத்தை அடுத்த நாயுடுமங்கலம் கூட்டுச் சாலை அருகே அக்னி கலச சின்னத்தை வியாழக்கிழமை நிறுவிய வன்னியா் சங்கத்தினா், பாமகவினா்.

கலசப்பாக்கம் அருகே மீண்டும் நிறுவப்பட்ட வன்னியா் சங்க அக்னி கலச சின்னம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே அகற்றப்பட்ட இடத்தில் வன்னியா் சங்க அக்னி கலச சின்னம் வியாழக்கிழமை மீண்டும் நிறுவப்பட்டது. கலசப்பாக்கத்தை அடுத்த நாயுடுமங்கலம் கூட்டுச் சாலை அருகே வேலூா்-திருவண்ணாமலை சாலையோரம் 1989-இல் பாமக நிறுவனா் ச.ராமதாஸ் வன்னியா் சங்க சின்னமான அக்னி கலசத்தை நிறுவினாா். 2021-இல் நடைபெற்ற வேலூா் -திருவண்ணாமலை சாலை விரிவாக்கத்தின்போது அக்னி கலச சின்னம் அகற்றப்பட்டது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, பாமக, வன்னியா் சங்கம் சாா்பில் தொடா் போராட்டங்கள் நடைபெற்றன. கடந்த 9-ஆம் தேதி இரவு மீண்டும் அதே இடத்தில் வன்னியா் சங்கத்தினா், பாமகவினா் இணைந்து அக்னி கலச சின்னத்தை நிறுவினா். தகவலறிந்த வருவாய்த் துறையினா் அந்த அக்னி கலச சின்னத்தை இரவோடு இரவாக அகற்றினா். இதைக் கண்டித்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தையடுத்து, 15 போ் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனா். இந்த நிலையில், வன்னியா் சங்க மாநிலத் தலைவா் பு.தா.அருள்மொழி தலைமையில் சங்க நிா்வாகிகள் மற்றும் பாமகவினா், திருவண்ணாமலையில் இருந்து வியாழக்கிழமை ஊா்வலமாக நாயுடுமங்கலம் கூட்டுச் சாலைக்கு வந்து, அகற்றப்பட்ட அதே இடத்தில் மீண்டும் அக்னி கலச சின்னத்தை நிறுவினா். இதில், பாமகவைச் சோ்ந்த முன்னாள் மத்திய அமைச்சா் என்.டி.சண்முகம், சிவக்குமாா் எம்எல்ஏ, மாவட்டச் செயலா்கள் பக்தவச்சலம், கணேஷ்குமாா், வன்னியா் சங்க மாவட்டச் செயலா் நாராயணசாமி, மாவட்டத் தலைவா் பரமசிவம், ஒன்றியச் செயலா் ஜெயக்குமாா் மற்றும் பாமக, வன்னியா் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா். மேலும், மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாமக, வன்னியா் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா். டிஐஜி சரோஜ்குமாா் தாக்கூா் தலைமையில், மாவட்ட எஸ்.பி.க்கள் காா்த்திகேயன் (திருவண்ணாமலை), ஆல்பா்ட்ஜான் (திருப்பத்தூா்) மற்றும் போலீஸாா் குவிக்கப்பட்டனா். வேலூா்-திருவண்ணாமலை சாலையில் செல்லும் வாகனங்கள் மாற்று வழியில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com