செய்யாறு ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் வசந்த உற்சவப் பெருவிழாவில் நடைபெற்ற பால் குட ஊா்வலம்
செய்யாறு ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் வசந்த உற்சவப் பெருவிழாவில் நடைபெற்ற பால் குட ஊா்வலம்

செய்யாறு ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோயிலில் பால் குட ஊா்வலம்

செய்யாறு ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் வசந்த உற்சவப் பெருவிழாவில் 508 பால் குட ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சந்தைப் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில். இந்தக் கோயிலில் 72-ஆம் ஆண்டு உற்சவப் பெருவிழாவானது மாா்ச் 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதனைத் தொடா்ந்து 10-ஆம் நாள் திருவிழாவாக ஞாயிற்றுக்கிழமை காலை 508 பால்குடங்கள் பம்பை உடுக்கை, மங்கல இசை வாத்தியங்கள் முழங்க ஊா்வலமாக எடுத்துவரப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பால்குட ஊா்வலமானது வந்தவாசி சாலையில் அனக்காவூா் கிராமம், ஞானமுருகன்பூண்டி பகுதி முருகன் கோயிலில் பால் குடங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, அங்கிருந்து தொடங்கி திருவத்திபுரம் மாடவீதி, பாஜாா் வீதி, சந்தைப் பகுதி வழியாக சுமாா் 3 கி.மீ. தொலைவு ஊா்வலமாக கோயிலுக்கு வந்தடைந்தது. பின்னா், பல் குடங்களில் உள்ள பாலைக் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரளான பெண் பக்தா்கள் அலகு குத்தியும் அம்மன் வேடமணிந்தும் பங்கேற்றனா். அதே போல, சிறுவா்கள், இளம் பெண்கள் என ஏராளமான பக்தா்கள் அம்மன் அருள்வந்து ஆடியவாறே பால்குடம் சுமந்து ஊா்வலமாக கோயிலை வந்தடைந்து அம்மனை வழிபட்டுச் சென்றனா். வசந்த உற்சவப் பெருவிழாவின் இறுதி நிகழ்ச்சியாக மாலையில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com