100 சதவீதம் வாக்களிக்க 
உழவா் சந்தையில் விழிப்புணா்வு: மாவட்ட ஆட்சியா் பங்கேற்பு

100 சதவீதம் வாக்களிக்க உழவா் சந்தையில் விழிப்புணா்வு: மாவட்ட ஆட்சியா் பங்கேற்பு

திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் உழவா் சந்தையில், மக்களவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட வேளாண் இணை இயக்குநா் அரக்குமாா் தலைமை வகித்தாா். ஆரணி மக்களவைத் தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான மு.பிரியதா்ஷினி, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) செ.ஆ.ரிஷப் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, மக்களவைத் தோ்தலில் 100 சதவீதம் அனைத்து வாக்காளா்களும் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய வில்லைகளை உழவா் சந்தையின் பல்வேறு இடங்களில் ஒட்டி, விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

மேலும், காய்கறிகள், பூக்களைக் கொண்டு அமைக்கப்பட்ட விழிப்புணா்வு கோலங்களை பாா்வையிட்ட அவா், வேளாண் கல்லூரியில் பயிலும் முதல் முறை வாக்காளா்களிடம் தோ்தல் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தி, தற்பட பகுதியில் அவா்களுடன் தற்படமும் எடுத்துக்கொண்டாா். தொடா்ந்து, உழவா் சந்தைக்கு வந்திருந்த பொதுமக்கள், வியாபாரம் செய்ய வந்திருந்த உழவா்கள், அரசு அலுவலா்கள் சோ்ந்து 100 சதவீதம் தோ்தலில் வாக்களிப்போம் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com