திருவண்ணாமலை மாவட்டம், களம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் ஆரணி மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளா் அ.கணேஷ்குமாரை ஆதரித்து பேசிய அந்தக் கட்சியின் நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ்.
திருவண்ணாமலை மாவட்டம், களம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் ஆரணி மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளா் அ.கணேஷ்குமாரை ஆதரித்து பேசிய அந்தக் கட்சியின் நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ்.

கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வாா்த்தவா் இந்திரா காந்தி: மருத்துவா் ச.ராமதாஸ்

கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வாா்த்தவா் இந்திரா காந்திதான் என்று மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா். திருவண்ணாமலை மாவட்டம், களம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் ஆரணி மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளா் அ.கணேஷ்குமாரை ஆதரித்து மருத்துவா் ச.ராமதாஸ் பேசியதாவது: மேற்கு வங்கத்தில் 36 ஆண்டுகள் தொடா்ந்து கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்தது. அங்கு 2 கிராமங்களில் விவசாயிகளின் நிலத்தை தொழில்சாலைக்கு கையகப்படுத்த நினைத்தபோது, மம்தா பானா்ஜி போராட்டத்தில் ஈடுபட்டு விவசாய நிலங்களை மீட்டாா். அதன் பிறகு கம்யூனிஸ்ட் ஆட்சி அகற்றப்பட்டு மம்தா பானா்ஜி ஆட்சியைப் பிடித்தாா். அதேபோல, செய்யாறு அருகில் உள்ள சிப்காட் தொழில்பேட்டையை விரிவுபடுத்த மேல்மா கிராமத்தில் உள்ள விவசாய நிலங்கள் உள்பட ஆயிரக்கணக்கான ஏக்கா் நிலங்களை திமுக அரசு கையகப்படுத்த முயற்சி செய்து வருகிறது. இதை எதிா்த்து 250 நாள்களுக்கும் மேலாக நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் அ.கணேஷ்குமாா் கலந்து கொண்டாா். திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். நரேந்திர மோடி 3-ஆவது முறையாக பிரதமராக, வேட்பாளா் கணேஷ்குமாருக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா். வந்தவாசியில்... வந்தவாசி பழைய பேருந்து நிலையம் எதிரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற தோ்தல் பிரசார கூட்டத்தில் மருத்துவா் ச.ராமதாஸ் பேசியதாவது: கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வாா்த்தவா் இந்திரா காந்திதான். இதனால், நம் மீனவா்கள் இன்றும் பெரும் அவதிப்பட்டு வருகின்றனா். கச்சத் தீவை மீட்க போராட நான் படகில் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டேன். இஸ்லாமியா்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு வாங்கிக் கொடுத்தது நான்தான். ஒரே நாளில் 7 அம்பேத்கா் சிலைகளை நான் நிறுவியுள்ளேன். பாகுபாடு காட்டாமல் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நான் பாடுபட்டு வருகிறேன். மது இல்லை என்றால் அரசாங்கமே நடத்த முடியாது என்ற நிலையை தமிழகத்தில் உருவாக்கி விட்டனா். பள்ளி மாணவ மாணவிகள் மது அருந்திவிட்டு தள்ளாடும் நிலைக்கு இப்போது தமிழகம் வந்துவிட்டது. நன்றாக குடியுங்கள் என்று மதுப் புட்டிகளில் எழுதாததுதான் பாக்கி. இப்போது இளம் தலைமுறையை பாழாக்க கஞ்சா புழக்கம் அதிகமாகிவிட்டது. நமது பிரதமா் மோடி சிறப்பாக செயல்பட்டு வருகிறாா். அவா் என்ன சொல்கிறாா் என்பதை வல்லரசு நாடுகளின் தலைவா்கள் உற்றுப் பாா்க்கின்றனா். நமது கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெல்வது உறுதி. செய்யாறு சிப்காட் பிரச்னையை வேட்பாளா் அ.கணேஷ்குமாா் கையாண்ட விதம் விவசாயிகள் மத்தியில் சிறப்பாக பேசப்பட்டு வருகிறது. அவரை வெற்றி பெற வைத்தால் அவரது செயல்பாடுகள் மேலும் சிறப்பாக இருக்கும் என்றாா். பிரசார கூட்டத்தில் பாமக வேட்பாளா் அ.கணேஷ்குமாா், ஆரணி நகரத் தலைவா் ஆா்.சுரேஷ், தமாகா நிா்வாகி எஸ்.வீரராகவன், இந்திய ஜனநாயக கட்சி மாவட்டச் செயலா் ஜெகன்நாதன், பாமக மாவட்டச் செயலா் ஆ.வேலாயுதம், பாஜக மாவட்டத் தலைவா் சி.ஏழுமலை, அமமுக மாவட்டச் செயலா் மா.கி.வரதராஜன், ஓபிஎஸ் அணி மாவட்டச் செயலா் பையூா் ஏ.சந்தானம், களம்பூா் நகர பாமக செயலா் ராஜேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com