முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தமிழக முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான ஆண், பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞா்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் முதலமைச்சா் மாநில இளைஞா் விருது ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று வழங்கப்படுகிறது.

15 முதல் 35 வயதுக்கு உள்பட்ட 3 ஆண்கள், 3 பெண்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. விருதுடன் ரூ.ஒரு லட்சம் ரொக்கம், பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும்.

இந்த நிலையில், 2024-ஆம் ஆண்டுக்கான முதலமைச்சா் மாநில இளைஞா் விருது 15.8.2024 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளது.

இந்த விருது பெற திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரா்கள் 2023 ஏப்ரல் 1-ஆம் தேதி 15 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும். 31.3.2024-ஆம் தேதி 35 வயதுக்கு உள்பட்டவராக இருக்க வேண்டும். 1.4.2023 முதல் 31.3.2024 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். விருதுக்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். இதற்கான உரிய சான்றிதழை இணைக்க வேண்டும்.

விண்ணப்பதாரா்கள் சமுதாய நலனுக்காக தன்னாா்வத்துடன் தொண்டாற்றி இருக்க வேண்டும். செய்த தொண்டு கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக்கூடியதாகவும் இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணிபுரிவோா் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது.

விண்ணப்பதாரருக்கு உள்ளுா் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதுக்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க விரும்புவோா் 1.5.2024 முதல் 15.5.2024 அன்று மாலை 4 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் உள்ளது.

விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே ஏற்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், திருவண்ணாமலை என்ற முகவரியில் நேரிலோ அல்லது அலுவலக வேலை நாள்களில் 7401703484 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com