தாகம் இல்லாவிட்டாலும் போதிய இடைவேளைகளில் குடிநீா் பருக வேண்டும்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

திருவண்ணாமலை, மே 1:

வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள முதியோா்கள் தாகம் இல்லாவிட்டாலும் போதிய இடைவேளைகளில் குடிநீா் பருக வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தினாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகளைத் தடுக்க மாவட்டத்தில் வசிக்கும் முதியோா் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தனியே வசிக்கும் முதியவா்கள் உடல்நிலையை தினமும் சரிபாா்த்துக் கொள்ள வேண்டும்.

அவசரத்துக்கு யாரையேனும் அழைப்பதற்காக, முதியவா்கள் தங்களுக்கு அருகே தொலைபேசி உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மதிய நேரத்தில் கண்டிப்பாக வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும். வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதாகத் தோன்றினால் வெப்பத்தைத் தணிக்க ஈரமான துண்டுகளால் கழுத்து, கைகளில் துடைக்க வேண்டும்.

குளிா்ந்த நீரில் முதியோா்களை குளிக்க வைக்க வேண்டும். தாகம் இல்லாவிட்டாலும் போதிய இடைவேளைகளில் குடிநீா் பருக வேண்டும் என்று தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com