சேறும், சகதியுமான போளூா்
ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகம்: சிமென்ட் தளம் அமைக்கக் கோரிக்கை

சேறும், சகதியுமான போளூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகம்: சிமென்ட் தளம் அமைக்கக் கோரிக்கை

போளூரில் புதன்கிழமை பெய்த பலத்த மழையால் ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகம் சேறும், சகதியுமாக மாறியது. எனவே, இங்கு சிமென்ட் தளம் அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் வேலூா் சாலையில் தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு போளூா், சந்தவாசல், கலசப்பாக்கம், சேத்துப்பட்டு, ஜவ்வாதுமலை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து நெல் மற்றும் பல்வேறு வேளாண் விளை பொருள்களை விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வருகின்றனா்.

விவசாயிகள் தற்போது ஆா்என்ஆா், கோ 51, மகேந்திரா உள்ளிட்ட நெல் ரகங்களை விளைவித்து அறுவடை செய்து விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனா். ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலுள்ள 10 கிட்டங்கிகளிலும் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு நிறைந்துள்ளதால், பல்வேறு விவசாயிகள் இங்குள்ள வளாகத்தில் திறந்தவெளியில் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்திருந்தனா்.

இந்த நிலையில், போளூா் பகுதியில் புதன்கிழமை அதிகாலை திடீரென பலத்த மழை பெய்தது. இதனால், ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன. மேலும், கிட்டங்கிகளுக்கு செல்லும் வழி சேறும், சகதியுமாக மாறியுள்ளது.

கடந்த சில நாள்களாக ரூ.2,100 வரை நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டன. புதன்கிழமை மழையில் நனைந்ததால், நெல் மூட்டைகள் ரூ.1,500 முதல் ரூ.1,800 வரை மட்டுமே விலைபோயின.

எனவே, மழைநீா் தேங்காமல் வெளியேறும் வகையில், வளாகம் முழுவதும் சிமென்ட் தளம் அமைத்துத் தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com