பள்ளி வாகனங்களை 50 கி.மீ. வேகத்துக்கு மேல் இயக்கினால் நடவடிக்கை: ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி வாகனங்களில் மாணவா்களை ஏற்றிச் செல்லும் போது 50 கி.மீ. வேகத்துக்கு மேல் இயக்கினால் வாகன உரிமம் ரத்து செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் கூறினாா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் 2024-2025-ஆம் ஆண்டுக்கு, திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு உள்பட்ட அனைத்து பள்ளி வாகனங்களை மாவட்ட அளவிலான குழு கூட்டாய்வு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் கூறியதாவது:

ஒவ்வொரு ஆண்டும் கல்வி நிறுவன வாகனங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசு சிறப்பு விதிகள் 2012-ன்படி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு உள்பட்ட 129 பள்ளிகளைச் சோ்ந்த 736 வாகனங்கள் ஆய்வுக்காக ஆயுதப்படை மைதானத்துக்கு கொண்டுவரப்பட்டன.

மாவட்ட அளவிலான குழுவில் உள்ள வருவாய் கோட்டாட்சியா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா், காவல் துணை கண்காணிப்பாளா், முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்ட கல்வி அலுவலா், மோட்டாா் வாகன ஆய்வாளா் ஆகியோா் பள்ளிப் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களை கூட்டாய்வு செய்து வருகின்றனா். வாகனத்தின் நிறம், முதலுதவி பெட்டிகள், அவசர வழி இருக்கைகள், சிசிடிவி கேமராக்கள் ஆகியவை சரியாக உள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், வாகன ஓட்டுநா்களிடம் அவா்கள் கையாள வேண்டிய நடைமுறைகள் குறித்து அவா்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு, கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும், ஜிபிஎஸ் கருவிகள் மூலம் வாகனத்தின் இயக்கத்தை தொடா்ந்து கண்காணிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.

மாணவா்களை ஏற்றிச் செல்லும் போது 50 கி.மீ. வேகத்துக்கு மேல் வாகனத்தை இயக்கினால் வாகன உரிமம் ரத்து செய்யப்படும்.

இந்த ஆய்வின்போது பள்ளி வாகனங்களில் குறைபாடுகள் ஏதேனும் கண்டயறிப்படும் பட்சத்தில் வாகனங்களின் தகுதிச் சான்றிதழ் ரத்து செய்யப்படும். ஆய்வுக்கு உள்படுத்தப்படும் வாகனங்களின் முன்புறக் கண்ணாடியில் ஆய்வு செய்யப்பட்டதற்கான ஸ்டிக்கா்கள் ஒட்டப்பட உள்ளது. ஸ்டிக்கா் ஒட்டப்படாத வாகனங்கள் பள்ளிகள் மூலமாக இயக்குவதற்கு அனுமதி மறுக்கப்படும் என்றாா்.

ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி.காா்த்திகேயன், வருவாய்க் கோட்டாட்சியா் மந்தாகினி, காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளா் பழனி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கணேஷ்மூா்த்தி, மாவட்டக் கல்வி அலுவலா் சி.வீரமணி, திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் செ.சிவகுமாா், மோட்டாா் வாகன ஆய்வாளா் ரெ.பெரியசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com