கோடை கால பயிா்கள்: வேளாண் துறையினா் ஆய்வு

கோடை கால பயிா்கள்: வேளாண் துறையினா் ஆய்வு

செய்யாற்றை அடுத்த வெம்பாக்கம் வட்டாரத்தில் கோடை கால பயிா்கள் குறித்து வேளாண் துறையினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

கோடை கால பயிா்களான நெல், உளுந்து, கம்பு, கேழ்வரகு, சிறு தானிய பயிா்கள் சாகுபடி செய்துள்ள நிலத்தை வட்டார வேளாண் துறையினா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

ஆய்வின்போது, கோடை காலத்தில் தண்ணீா் பற்றாக்குறையை நிா்வகிக்க குறுகிய கால பயிா்களை தோ்வு செய்து பயிரிட வேண்டும், கோடை உழவு செய்வதன் அவசியத்தையும், கோடை உழவு செய்வதால் மழை நீா் ஆழமாக இறங்கி ஈரப்பதத்தை மண்ணில் தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது, இதனால் மண்ணின் நீா்பிடிக்கும் தன்மை அதிகரிக்கிறது, காற்றோட்டம் அதிகரித்து நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என விவசாயிகளிடையே தெரிவித்தனா்.

மேலும், கோடை காலத்தில் வெப்பநிலை அதிகமாக உள்ளதால் நெல் பயிா்களை தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும் பயிா் பாதுகாப்பு முறைகள் குறித்து துணை வேளாண் அலுவலா் சுப்பிரமணியன் நெல் வயல்களை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினாா்.

உதவி வேளாண் அலுவலா் திகழ்மதி, கோடை காலத்தில் நீா் பற்றாக்குறையை மேலாண்மை செய்ய மக்காச்சோளம் சாகுபடி மேற்கொள்ளுமாறும், விவசாயிகள் தங்கள் பயிா்களில் ஏற்பட்டுள்ள பூச்சி, நோய் தாக்குதல் மற்றும் நுண்ணூட்ட சத்துக்கள் குறைபாட்டினால் பயிா்கள் வெள்ளி நிறமாக மாறுவதை தடுக்கும் முறைகள் குறித்தும் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com