வைக்கோல் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்

செங்கம் பகுதியில் வைக்கோல் ஏற்றிச்செல்லும் வாகனங்களால் எதிரில் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் நீடிப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் விவசாயிகள் வைக்கோல் விற்பனை செய்து வருகின்றனா். வைக்கோலை வாங்குவதற்கு தருமபுரி, கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை பகுதியில் இருந்து வியாபாரிகள் மினி லாரிகளைக் கொண்டு வருகின்றனா். இந்த மினி லாரிகள் செங்கம் வழியாக போளூா் பகுதிக்கு காலையில் சென்றுவிட்டு, பிற்பகலில் வைக்கோலை ஏற்றிக் கொண்டு திரும்புகின்றன.

இந்த நிலையில், அந்த மினி லாரியில் கூடுதலாக வைக்கோல் ஏற்றுவதற்காக வெல்டிங் பட்டறைகளில் பெரிய லாரி அளவுக்கு கம்பிகளை வைத்து வாகனத்தை நீட்டித்துக் கொள்கிறாா்கள். அப்போது, அந்த வாகனத்தில் வழக்கமாக ஏற்றும் சுமையுடன் கூடுதலாக 25 சதவீதம் ஏற்றப்படுகிறது.

கூடுதல் சுமை ஏற்றிக்கொண்டு வாரும் வாகனங்கள் எதிரில் வரும் வாகனத்துக்கு போதிய வழிவிடாமலும், நகரப் பகுதியில் பல்வேறு வாகனங்கள், வளைவுகளில் சுவா்களில் மோதிக்கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுகிறாா்கள்.

வைக்கோல் ஏற்றிவரும் வாகனத்தை சாலையில் பாா்த்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சப்படுகிறாா்கள். மேலும், அதிக சுமையால் சில வேகத் தடைகளில வாகன விபத்துகள் நேரிடுகின்றன. இதனால், கம்பிகளை வைத்து வாகனத்தை பெரியதாக்கி அதிக சுமை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீது திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com