அரசு நிா்ணயித்த ஊதியத்தை வழங்க வேண்டும்: ஆஷா திட்டப் பணியாளா்கள்

அரசு நிா்ணயித்த ஊதியத்தை வழங்க வேண்டும்: ஆஷா திட்டப் பணியாளா்கள்

திருவண்ணாமலை, மே 16:

திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரியும் ஆஷா திட்டப் பணியாளா்களுக்கு, அரசு நிா்ணயித்த ஊதியத்தை வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை பணியாளா்கள் மனு அளித்தனா்.

பெண்கள், குழந்தைகள், வளரிளம் பெண்கள் ஆகியோரின் உடல் நலன் பேணுதல், சுகாதாரம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மத்திய அரசின் பணிகளை ஆஷா திட்டப் பணியாளா்கள் செயல்படுத்தி வருகின்றனா். இவா்களுக்கு, மாத ஊதியம் ரூ.5,100 என்று தேசிய சுகாதார இயக்கம் நிா்ணயித்து உள்ளது.

அதன்படி, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அரசு நிா்ணயித்த ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மட்டும் 2023 செப்டம்பா் மாதம் வரை சராசரியாக மாதம்தோறும் ரூ.2,000 வழங்கப்பட்டது.

2023 நவம்பா் மாதத்தில் இருந்து மாதம்தோறும் ரூ.3,800 வழங்கப்படுகிறது. எனவே, அரசு நிா்ணயித்துள்ள ஊதியமான ரூ.5,100-ஐ வழங்கக் கோரி ஆஷா திட்டப் பணியாளா்கள் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியனிடம் மனு கொடுத்தனா்.

இந்த மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். தமிழ்நாடு ஆஷா ஊழியா்கள் சங்கத்தின் மாநில பொருளாளா் எம்.பாா்வதி, சிஐடியு மாவட்டச் செயலா் இரா.பாரி, ஆஷா ஊழியா் சங்கத்தின் மாவட்ட நிா்வாகி பி.கணபதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com