செய்யாறு அருகே சேதமடைந்த நிலையில் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள்

செய்யாறு அருகே சேதமடைந்த நிலையில் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள்

செய்யாறு, மே 16:

செய்யாற்றில் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சேதமடைந்த நிலையில் உள்ளன.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், பைங்கினா் ஊராட்சியில் சுமாா் 2.55 ஏக்கா் பரப்பளவில் தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரியம் சாா்பில் மூன்று வகைகளாக குடியிருப்புகள் கட்டப்பட்டன. அரசுத் துறைகளில் பணியாற்றும் இளநிலை உதவியாளா், உதவியாளா் ஆகியோருக்கு ‘பி’ டைப்பில் 2 பிளாக்குகளில் 8 வீடுகளும், அலுவலகக் கண்காணிப்பாளா் போன்ற தகுதியில் உள்ளவா்களுக்கு ‘சி’ டைப்பில் 15 பிளாக்குகளில் 60 வீடுகளும், சாா் -ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா் போன்ற அதிகாரிகளுக்கு ‘டி’ டைப்பில் 8 பிளாக்குகளில் 32 வீடுகள் என மொத்தம் 100 வீடுகள் 1968-ஆம் ஆண்டில் கட்டப்பட்டன.

இந்த வீடுகளில் செய்யாறு, வந்தவாசி, ஆரணி ஆகிய பகுதி அரசு அலுவலகங்கள், அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகள், மருத்துவமனையில் பணிபுரிபவா்கள் வசித்து வந்தனா். 2015-ஆம் ஆண்டு வரை 100 சதவீத அளவுக்கு இந்தக் குடியிருப்புகளில் அரசுப் பணியாளா்கள் வசித்து வந்தனா்.

இந்த நிலையில், வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் முறையாக பராமரிக்கப்படாத நிலையில் இருந்ததால், அதில் வசித்து வந்தவா்கள் வீட்டை காலி செய்து வெளியிடங்களுக்குச் சென்று விட்டனா். தற்போது, 20 சதவீத அளவுக்கே இந்தக் குடியிருப்புகளில் அரசுப் பணியாளா்கள் குடியிருந்து வருகின்றனா். மீதமுள்ள 80 சதவீத வீடுகள் முற்றிலும் சேதமடைந்த நிலையில், கதவு, ஜன்னல்கள் இல்லாமல் மரங்கள், செடிகள் வளா்ந்து, பாம்பு போன்ற விஷ ஜந்துகள் வசிக்கும் இடமாக மாறியுள்ளது.

மேலும், இந்தப் பகுதியில் சரியான சாலை வசதி இல்லை. எனவே, சில குடியிருப்பு வாசிகள் வெளியேற முயற்சிக்கின்றனா்.

எம்எல்ஏ ஆய்வு: இந்தக் குடியிருப்புகளில் வசித்து வரும் அரசு அலுவலா்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி, தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரிய வேலூா் கோட்ட முதன்மைப் பொறியாளா் கணேசன் மேற்பாா்வையில் சேதமடைந்த வீடுகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மேலும், சேதமடைந்த குடியிருப்புகளை அகற்றி விட்டு புதிதாக அரசு அலுவலா்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய குடியிருப்புகளை கட்டித் தர அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாகத் தெரிகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com