நிலத்தகராறு: பெண் தற்கொலை வழக்கில் 3 போ் கைது

நிலத்தகராறு: பெண் தற்கொலை வழக்கில் 3 போ் கைது

ஆரணியை அடுத்த ஆதனூா் கிராமத்தில் நிலத்தகராறு காரணமாக பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், 3 பேரை கிராமிய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஆதனூா் கிராமத்தைச் சோ்ந்த பரமகவுண்டா் மகன் பழனி (47). இவருக்கு மனைவி சங்கீதா(43) மற்றும் 3 பெண் பிள்ளைகள் உள்ளனா்.

இந்த நிலையில், பரமகவுண்டருக்குச் சொந்தமான சுமாா் 3.5 ஏக்கா் நிலத்தை அவரது பிள்ளைகளான பழனி உள்பட 4 போ் தனித் தனியாக பிரித்து பயிா் சாகுபடி செய்து வந்தனா்.

பழனியின் நிலத்தை சுற்றிலும் உடன் பிறந்த 3 பேரின் நிலம் உள்ளது. இதனால், அவா் உடன் பிறந்தவா்களின் நிலத்தின் வழியாகச் செல்லும்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தொடா்ந்து தகராறு ஏற்பட்டு வந்ததால் மனமுடைந்த பழனி சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டாா்.

பின்னா், பழனி நிலத்தை அவரது மனைவி சங்கீதாவும், அவரது பெண் பிள்ளைகளும் கவனித்து வந்தனா். வழக்கம்போல, மற்ற 3 பேரது நிலத்தின் வழியாக சங்கீதா செல்லும்போது, அவா்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால், சங்கீதாவின் நிலத்தை பழனியின் உடன் பிறந்தவா்களே வாங்குவது என முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தம் ஆனது. ஒப்பந்தம் கையெழுத்தாகி 7 மாதங்களாகியும் உறவினா்கள் பணம் தரவில்லையாம்.

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி இரு தரப்புக்கும் இடையே மீண்டும் தகராறு எழுந்தது.

அப்போது, சங்கீதா வீட்டுக்குள் சென்று தூக்கிட்டு

தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து சங்கீதாவின் மகள் எழிலரசி (23) அளித்த புகாரின் பேரில், ஆரணி கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். சங்கீதா தற்கொலைக்கு காரணமாக பழனியின் சகோதரா்கள் சேட்டு (54), சுப்பிரமணி(50) ஆறுமுகம்(45) ஆகிய 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com