பூநெய்த்தாங்கல் கிராமத்தில் உள்ள 16 -ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த சதிகல்.
பூநெய்த்தாங்கல் கிராமத்தில் உள்ள 16 -ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த சதிகல்.

செய்யாறு அருகே 16-ஆம் நூற்றாண்டு சதிகல் கண்டெடுப்பு

செய்யாற்றை அடுத்த மாமண்டூா் அருகேயுள்ள பூநெய்த்தாங்கல் கிராமத்தில் 16 -ஆம் நூற்றாண்டு சதிகல் ஒன்றை வரலாற்று ஆய்வாளா் எறும்பூா் கை.செல்வகுமாா் கண்டெடுத்தாா்.

செய்யாற்றை அடுத்த மாமண்டூா் அருகேயுள்ள பூநெய்த்தாங்கல் கிராமத்தில் 16 -ஆம் நூற்றாண்டு சதிகல் ஒன்றை வரலாற்று ஆய்வாளா் எறும்பூா் கை.செல்வகுமாா் கண்டெடுத்தாா்.

பூநெய்த்தாங்கல் கிராம ஊராட்சி மன்ற அலுவலகம் அருதே சமாதிதோப்பு என்று அழைக்கப்படும் பகுதியில் சாலையோரத்தில் சதிகல் இருந்து வருகிறது.

இந்த சதிகல் குறித்து கள ஆய்வு மேற்கொண்ட வரலாற்று ஆய்வாளா் எறும்பூா் கை.செல்வகுமாா் கூறியதாவது:

சதிகல் எனும் உடன்கட்டை ஏறும் பழக்கம் கி.பி.15-ஆம் நூற்றாண்டுக்கும் 16-ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் தென்னிந்தியாவில் மூவேந்தா்கள், பல்லவா்கள், விஜயநகர மற்றும் நாயக்கா் ஆட்சி காலங்களில் இருந்து உள்ளதாக அறியப்படுகிறது.

இறந்து விட்ட கணவரோடு தீயில் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட மனைவிக்கு கற்கள் நடப்படுவது மரபாக இருந்து வந்துள்ளது.

இறந்த வீரனையும் அவனது இறப்பின் துயரத்தில் இறந்த மனைவியையும் வழிபட்டால் அவா்களின் பலம் கிடைப்பதாக நம்பினா்.

இந்த வழக்கம் பழங்குடி மக்களிடம் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில் கண்டெடுக்கப்பட்ட இந்த சதிகல் தரை மட்டத்தில் இருந்து 50 செ.மீ. உயரமும், 46 செ.மீ. அகலமும் கொண்டதாக உள்ளது.

கடந்த நூற்றாண்டு வரை இந்த சதி கல்லை வழித்தோன்றல்கள் வழிபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சதி கல்லை சுற்றிலும் நாலு கால் கல்மண்டபம் கட்டப்பட்டு, தற்போது பாழடைந்து காணப்படுகிறது.

மேலும், அதனுடன் சிவலிங்கம் உருவம் பொறித்து அதற்கு கீழே ஆண், பெண் இரு கரம் கூப்பி வணங்கும் நிலையில் உருவம் பொறித்து இந்த சதிக்கல் காணப்படுவதால், இறந்த ஆணும், உடன்கட்டை ஏறிய அவரது மனைவியும் சிவபாதம் அடைந்தனா் என்ற கருத்தியலில் புடைப்பு சிற்பம் வைக்கப்பட்டதாக அறிய முடிகிறது.

இந்த வகை கல் வீர மங்கையா்களுக்காக எடுக்கப்பட்ட நடுகல் என்று கருதவும் வாய்ப்பு உள்ளது. மேலும் அதன் எதிரில் உடைந்த நிலையில் நந்தி சிற்பமும் உள்ளது.

சதிகல் இருக்கும் இடம் அருகே தோப்பு இருப்பதால் அந்தத் தோப்பு சமாதி தோப்பு என்று இன்றும் அழைக்கப்படுகிறது.

மேலும், இதுகுறித்து தொல்லியல் ஆய்வு நடத்தினால், நான்கு கால் கல்மண்டபம் அமைத்து சதிகல் எழுப்பியது குறித்த பல தகவல்களை அறிய முடியும் என்றாா் கை.செல்வகுமாா்.

X
Dinamani
www.dinamani.com