மாணவா்களுக்கு கல்விதான் சொத்து: மாவட்ட ஆட்சியா்

மாணவா்களுக்கு கல்விதான் சொத்து: மாவட்ட ஆட்சியா்

பெற்றோா் எந்தத் தொழில் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் கல்விதான் மாணவா்களுக்கு சொத்து என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் கூறினாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 11 இடங்களில் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களில் வசிக்கும் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான உயா்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

அயலக தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை, கல்வித் துறை சாா்பில், திருவண்ணாமலை தியாகி அண்ணாமலைப் பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்தப் பயிற்சி வகுப்புக்கு

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் து.கணேஷ்மூா்த்தி தலைமை வகித்தாா்.

மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கிவைத்துப் பேசியதாவது:

ஒரே வயிற்றில் பிறந்தவா்களாக இருந்தாலும் கற்றவா்களை மட்டுமே அரசு முன்னிலைப்படுத்தும். கல்விதான் முக்கியத்துவம்.

பெற்றோா் எந்தத் தொழில் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், கல்விதான் மாணவா்களுக்கு சொத்து. அடுத்த தலைமுறையை மாற்றுவதற்குரிய வல்லமை இந்தத் தலைமுறையில் இருக்கிறது என்றால் அது கல்வி மட்டுமே. செல்வம் எவ்வளவு சோ்த்தாலும் அது அழிந்துவிடும். கல்வியுடன் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக யாரெல்லாம் பயன்படுத்துகிறோம் என்பது தான் முக்கியம்.

வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி கல்வி கற்று உயா்ந்த நிலைக்குச் செல்ல வேண்டும்.

மாணவா்கள் தொழில் முனைவோராக மாறுவதற்காக அரசு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. நீங்கள் சிந்தித்து, திட்டமிட்டு முயற்சி செய்ய வேண்டும் என்றாா்.

இதில், மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியின் தலைமை ஆசிரியா் ராம்தாஸ், இலங்கைத் தமிழா் மறுவாழ்வு திட்ட தனி வட்டாட்சியா் ச.சஜேஷ் பாபு மற்றும் ஆசிரியா்கள், பெற்றோா்கள், 122 இலங்கைத் தமிழா் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com