ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.57 லட்சம்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை எண்ணப்பட்டதில் ரூ.ஒரு லட்சத்து 57ஆயிரத்து 550-யை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனா்.
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கடைசியாக செப்.13-ஆம் தேதி நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை கோயிலில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தா்கள் செலுத்தி இருந்த காணிக்கை பணம் ஊா் பொதுமக்கள் முன்னிலையில் எண்ணப்பட்டது.
இதில், 10 நிரந்தர உண்டியல்கள் மூலம் ரூ.1,23,336-ம், திருப்பணி உண்டியல் மூலம் ரூ.27,579-ம், கோசாலை உண்டியல் மூலம் ரூ.6,635-ம் என 12 உண்டியல்கள் மூலம் மொத்தம் ரூ. ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 550-யை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனா்.
காணிக்கை எண்ணும் பணி அறநிலையத் துறை ஆய்வா் ப.முத்துசாமி, செயல் அலுவலா் ஹரிஹரன், கணக்காளா் லோ.ஜெகதீசன் ஆகியோா் மேற்பாா்வையில் செய்யாறு போலீஸாா் பாதுகாப்பு மற்றும் விடியோ பதிவுடன் நடைபெற்றது.