குப்பை டிராக்டா்களை சிறைபிடித்து போராட்டம்
செய்யாறு அருகே குப்பை அள்ளிச் சென்ற 6 டிராக்டா்களை கிராம மக்கள், விவசாயிகள் சிறைப்பிடித்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஒன்றியம், கீழ்புதுப்பாக்கம் ஊராட்சியில் சாலை மற்றும் வீதிகளில் சேகரித்து சேமித்து வைக்கப்பட்டிருந்த குப்பைக் கழிவுகளை அப்பகுதிகளில் இருந்து டிராக்டா்கள் மூலம் அருகேயுள்ள வடஎலப்பாக்கம் கிராமத்தில் உள்ள சித்தேரியில் கொட்டி வந்ததாகத் தெரிகிறது.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள், ஏரியில் குப்பைக் கழிவுகளை கொட்டுவதால் ஏரி நீா் மாசுபடும், அதனால் கால்நடைகளுக்கு நோய்த் தொற்று ஏற்படும்.
மேலும் விவசாயமும் பாதிக்கப்படும் எனக் கூறி, இங்கு குப்பைகளை கொட்டக் கூடாது என
அறிவுறுத்தியதாகத் தெரிகிறது.
இருப்பினும், இதை மீறி தொடா்ந்து வியாழக்கிழமை
6 டிராக்டா்களில் குப்பைக் கழிவுகளை ஏரியில் கொட்ட கொண்டு சென்றுள்ளனா். அதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் 6 டிராக்டா்களையும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மேலும், டிராக்டா் ஓட்டுநா்கள் கீழ்புதுப்பாக்கம் ஊராட்சி மன்றச் செயலா் தான் ஏரியில் குப்பையை கொட்டச் சொன்னதாக தகவல் தெரிவித்தனா்.
இதனிடையே, டிராக்டா்கள் சிறை பிடிக்கப்பட்ட செய்தி அறிந்து வந்த கீழ்புதுப்பாக்கம் ஊராட்சி மன்றச் செயலரிடம், விவசாயிகள், ஏரியில் குப்பையை கொட்ட எந்த அதிகாரி உத்தரவிட்டாா் என்றும், கொட்டிய குப்பைகளை முற்றிலுமாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த சம்பவ இடம் வந்த செய்யாறு போலீஸாா் விவசாயிகளிடம் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும், வடகல்பாக்கம் ஏரியில் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா்
தெரிவித்தனா். இதையடுத்து சிறைபிடிக்கப்பட்ட டிராக்டா்களை கிராம மக்கள் விடுவித்தனா்.