நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் இயக்கி வைப்பு
திருவண்ணாமலை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட 10 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்களை அமைச்சா் எ.வ.வேலு திங்கள்கிழமை இயக்கிவைத்தாா்.
தமிழகத்தில் 200 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்களின் சேவையை முதல்வா் மு.க.ஸ்டாலின் அண்மையில் தொடங்கிவைத்தாா்.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்துக்கு ஒரு லட்சம் கால்நடைகளுக்கு ஒரு நடமாடும் கால்நடை மருத்துவ வாகனம் என்ற வீதத்தில் 12 வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், முதல்கட்டமாக 10 வாகனங்கள் பெறப்பட்டன.
இந்த வாகனங்களை இயக்கி வைக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. தண்டராம்பட்டு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்தாா்.
தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்களை இயக்கி வைத்துப் பேசினாா்.
விழாவில், மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
ஒவ்வொரு மருத்துவ வாகனத்திலும் ஒரு கால்நடை மருத்துவா், உதவியாளா், ஓட்டுநா் இருப்பா். இந்த நடமாடும் கால்நடை மருத்துவப் பிரிவின் சேவைக்கான அழைப்பு எண் 1962. இது, தனியாா் ஒப்பந்ததாரா் மூலம் செயல்படும்.
இந்த வாகனம் அரசு கால்நடை நிலையங்களுக்கு வெகு தொலைவில் உள்ள தோ்வு செய்யப்பட்ட கிராம ஊராட்சிகள் அடங்கிய வழித் தடங்களில் ஒரு நாளைக்கு 2 கிராம ஊராட்சிகள் வீதம் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சிகிச்சை, செயற்கைமுறை கருவூட்டல், குடல்புழுநீக்கம் போன்ற பணிகளை மேற்கொள்ளும்.
பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை 1962 என்ற அவசர அழைப்பின் பேரில் வழித் தடத்துக்கான கிராம ஊராட்சிகள் அடங்கிய ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கால்நடைகளுக்கான அவசர சிகிச்சைப் பணிகளை மேற்கொள்ளும்.