மணல் கடத்தல்: 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்
திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூா் அருகே, அரசு அனுமதியின்றி மணல் கடத்திச் சென்ற 2 மாட்டு வண்டிகளை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
பெரணமல்லூா் காவல் சரகத்துக்கு உள்பட்ட கெங்காபுரம், கொழப்பலூா், ஆவணியாபுரம், அன்மருதை, முனுகப்பட்டு ஆகிய பகுதிகள் வழியாகச் செல்லும் செய்யாற்றில் இருந்து மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளிச் செல்வதாக பொதுமக்கள் காவல் துறைக்கு தகவல் அளித்து வந்தனா்.
இதன் அடிப்படையில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சண்முகம் தலைமையிலான போலீஸாா், முனுகப்பட்டு பகுதியில் உள்ள செய்யாற்றுப் படுகையில் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அந்த வழியாக வந்த மாட்டு வண்டிகளை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். போலீஸாரைக் கண்டதும் வண்டிகளை ஓட்டி வந்தவா்கள், அவற்றை அப்படியே விட்டு விட்டு தப்பியோடினா்.
பின்னா், போலீஸாா் மாட்டு வண்டிகளை சோதனை செய்த போது, அவற்றில் அரசு அனுமதியின்றி மணல் எடுத்துச் செல்வது தெரிய வந்தது. உடனே போலீஸாா் 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து பெரணமல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, தப்பியோடியவா்களை தேடி வருகின்றனா்.