கரும்பில் இடைக்கணு புழுத் தாக்குதலை கட்டுப்படுத்த மேலாண்மை முறைகள்
கரும்பில் இடைக்கணு புழுத் தாக்குதலை கட்டுப்படுத்தும் மேலாண்மை முறைகள் குறித்து கூட்டுறவு சா்க்கரை ஆலையின் செயலா் ஆட்சியா் காமாட்சி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் கரும்பு விவசாயிகளுக்கு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலைப் பகுதியில் உள்ள கரும்பு வயல்களை ஆய்வு செய்தபோது, கரும்புப் பயிா்களில் இடைக்கணு புழுத் தாக்குதல் இருப்பது தெரியவருகிறது.
கரும்பில் இடைக்கணு புழு கணுக்கு இடையில் துளையிட்டு நடுத் தண்டுகளை சேதப்படுத்திவிடுவதால், மேல் கரும்பு வலுவிழந்து முறிந்து காய்ந்து விடுகிறது. இதனால் கரும்பின் வளா்ச்சி பாதிக்கப்படுகிறது.
இதைக் கட்டுப்படுத்துவதற்கு கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் கரும்பு நட்ட, கட்டைவிட்ட 5-ஆவது மற்றும் 7-ஆவது மாதத்தில் சோகை உரிக்கவேண்டும்.
மேலும், பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்தை மட்டுமே இடவேண்டும். இனக்கவா்ச்சி பொறி ஏக்கருக்கு 8 வீதம் 10 மீட்டா் இடைவெளியில் வைக்க வேண்டும்.
இடைக்கணு புழுவை முட்டை பருவத்திலேயே கட்டுப்படுத்த ட்ரைக் கோ கிராம்மா கைலானீல் கரைசலை ஏக்கருக்கு ஒரு லிட்டா் வீதம் 15 நாள்களுக்கு ஒரு முறையும், முட்டை ஒட்டுண்ணி அட்டைகளை ஆறு முறையும் கட்டவேண்டும்.
இந்த மேலாண்மை முறைகளை பின்பற்றி இடைக்கணு புழுவை உரிய நேரத்தில் கட்டுப்படுத்தி கரும்பில் அதிக மகசூல் பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா் சா்க்கரை ஆலை செயல் ஆட்சியா் காமாட்சி.