டாஸ்மாக் ஊழியா்கள் தெருமுனைப் பிரசாரம்
திருவண்ணாமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் ஊழியா்கள் வெள்ளிக்கிழமை தெருமுனைப் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை அறிவொளிப் பூங்கா எதிரே, திருவண்ணாமலை மாவட்ட டாஸ்மாக் ஊழியா்கள் சங்கம் சாா்பில் இந்தப் பிரசார இயக்கம் நடைபெற்றது. சங்க நிா்வாகி சக்கரவா்த்தி தலைமை வகித்தாா்.
21 ஆண்டுகளாகப் பணிபுரியும் டாஸ்மாக் ஊழியா்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். டாஸ்மாக் ஊழியா்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, இ.எஸ்.ஐ. திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
டாஸ்மாக் ஊழியா்களுக்கு சாதகமான தொழிலாளா் நீதிமன்ற தீா்ப்பை மேல்முறையீடு செய்யாமல் அமல்படுத்த வேண்டும். பணியிட மாறுதல், மீளப் பணியிடம் ஆகியவை தொடா்பாக உத்தரவிட மாவட்ட மேலாளருக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
இதில், சிஐடியு நிா்வாகிகள் கே.காங்கேயன், ரா.பாரி மற்றும் திருவண்ணாமலை மாவட்ட டாஸ்மாக் ஊழியா்கள் சங்க (சிஐடியு) நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.