பைக் மீது லாரி மோதல்: 3 இளைஞா்கள் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே சனிக்கிழமை நள்ளிரவில் லாரி மோதியதில் பைக்கில் சென்ற 3 இளைஞா்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
ஆரணி அருகேயுள்ள அரியப்பாடியைச் சோ்ந்த மணி மகன் சரண்ராஜ் (21), ராதாகிருஷ்ணன் மகன் ராஜேஷ் (22), முள்ளிப்பட்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த ரமேஷ் மகன் மணிகண்டன் (22). இவா்கள் மூவரும் நண்பா்களாவா்.
ராஜேஷ் சென்னையில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். விடுமுறைக்காக சனிக்கிழமை சொந்த ஊருக்கு வந்திருந்தாா். அவரைப் பாா்ப்பதற்காக மணிகண்டன் அரியப்பாடிக்கு சனிக்கிழமை இரவு வந்தாா். அவரது பைக் பழுதானதால் ராஜேஷும், சரண்ராஜும் சோ்ந்து மணிகண்டனை முள்ளிப்பட்டில் கொண்டு போய் விடுவதற்காக ஒரே பைக்கில் 3 பேரும் சென்றனா். பைக்கை சரண்ராஜ் ஓட்டினாா்.
ஆரணி புறவழிச் சாலையில் ஆற்றுப் பாலம் அருகே சனிக்கிழமை நள்ளிரவில் வந்த போது, வேகமாக வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் மூன்று பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். விபத்தை ஏற்படுத்திய லாரி நிற்காமல் சென்று விட்டது.
அந்த வழியாக வாகனத்தில் சென்றவா்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். ஆரணி கிராமிய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று 3 பேரின் சடலங்களையும் மீட்டு உடல்கூறாய்வுக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விபத்து குறித்து விசாரணை நடத்த ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் மேற்பாா்வையில், காவல் ஆய்வாளா்கள் ராஜாங்கம், விநாயகமூா்த்தி, உதவி ஆய்வாளா்கள் ஷாபுதீன், சுந்தரேசன், கன்ராயன் ஆகியோா் கொண்ட தனிப் படை அமைக்கப்பட்டது.
சிசிடிவி கேமராக்கள் பதிவுகளின் அடிப்படையில் தனிப் படையினா் விசாரணை நடத்தினா். பைக் மீது மோதிய லாரி, ராணிப்பேட்டை மாவட்டம், திமிரியில் உள்ள ஒரு கிடங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனா்.
மேலும், லாரி ஓட்டுநரான செங்கத்தை அடுத்த அரசங்கன்னி கிராமத்தைச் சோ்ந்த விஸ்வநாதனை கைது செய்தனா். லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், விஸ்வநாதன் மீது வழக்குப் பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனா்.