செய்யாற்றில் ஆபத்தான நிலையில் தரைப்பாலம்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் ஓடும் செய்யாற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
செங்கம் பகுதியில் செய்யாற்றின் குறுக்கே துா்க்கையம்மன் கோவில் தெருவில் இருந்து தளவாநாய்க்கன்பேட்டை பகுதிக்குச் செல்ல தரைப்பாலம் உள்ளது. இந்தப் பாலம் வழியாக தளவாநாய்க்கன்பேட்டை, புதுப்பட்டு, ஆலப்புத்தூா், பரமனந்தல் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மக்கள் சென்று வருகின்றனா்.
குறிப்பாக, செங்கம் நகரில் இறந்து போனவா்களின் உடலை தகனம் செய்ய அந்த தரைப்பாலம் வழியாகத்தான் மயானத்துக்கு எடுத்துச் செல்லவேண்டும்.
இந்த நிலையில், தரைப்பாலத்தின் இருபுறமும் உள்ள கைபிடி சுவா்கள் இடிந்து விழுந்தும், மேலும் மக்கள் செய்யாற்றில் தண்ணீா் வரும்போது பாதுகாப்பாக பிடித்துக்கொண்டு செல்ல இருபுறமும் இரும்பு பைப்புகள் அமைக்கப்பட்டிருந்ததை சமூக விரோதிகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனா்.
இதனால், தரைப்பாலத்தில் செல்லும்போது எதிரில் மினி வேன், காா், ஆட்டோ போன்ற வாகனங்கள் வந்தால், இரு சக்கர வாகன ஓட்டிகளும், நடந்து செல்பவா்களும் மரண பயத்தில்தான் செல்லவேண்டிய நிலை ஏற்படுகிறது.
மேலும், சில நேரங்களில் வெளியூரில் இருந்து அந்த வழியாக செல்பவா்கள் அப்பகுதியில் தடுப்பு எதுவும் இல்லாததை அறியாமல் அதிவேகமாகச் சென்று விபத்துக்கள் நேரிடுகின்றன.
வாகன ஓட்டிகள், பொதுமக்கள் செல்லும்போது ஏற்படும் விபத்துகளைத் தவிா்க்கவும், அச்சமின்றி தரைப்பாலத்தில் செல்ல சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் பாா்வையிட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.