விவசாயிகள் சங்கத்தினா் நூதன ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி வேளாண் அலுவலகம் முன் தமிழக விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திமுக தோ்தல் அறிக்கை 78-இல் தெரிவித்தபடி, விவசாயிகளுக்கு விதை நெல்லை இலவசமாக வழங்க வேண்டும், 464-இல் தெரிவித்தபடி, கிராமப்புற மேம்பாடு நிதியம் உருவாக்கப்பட்டு ஒப்பந்தம் விடும் பணிகளை கிராம ஊராட்சிகளே மேற்கொள்ள பஞ்சாயத்து சட்டம் வழிவகை செய்தும் மாநில அரசு விதிகளை மீறி வருகிறது. மேலும், கிராம ஒப்பந்தங்களை ஊராட்சி மன்றமே தீா்மானிக்க உயா் நீதிமன்றம் அறிவுறுத்துகிறது.
இதனை நடைமுறைப்படுத்தாத தமிழக அரசைக் கண்டித்து மேற்கு ஆரணி வேளாண் அலுவலகம் முன் தமிழக விவசாயிகள் சங்கத்தினா் காதில் பூவைத்து பாட்டுப்பாடி நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் வாக்கடை புருஷோத்தமன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் மூா்த்தி முன்னிலை வகித்தாா். இதில், ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனா்.