மணல் கடத்தல்: மாட்டு வண்டிகள் பறிமுதல்
ஆரணி அருகே மணல் கடத்தி வந்த 6 மாட்டு வண்டிகளை கிராமிய போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். மேலும், தப்பியோடிய 6 பேரை தேடி வருகின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த மோட்டூா் ஆற்றுப் படுகையில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்துவதாக ஆரணி கிராமிய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சேத்துப்பட்டு சாலையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, நெசல் பகுதியில் வந்த மணல் கடத்தி வந்த 6 மாட்டு வண்டிகளை மறித்தனா்.
அப்போது, அதிலிருந்தவா்கள் போலீஸாரை பாா்த்ததும் தப்பியோடி விட்டனா். இதையடுத்து, போலீஸாா் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து ஆரணி கிராமிய காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா். விசாரணையில், மோட்டூா் கிராமத்தைச் சோ்ந்த முனுசாமி மகன் பெருமாள் (30), சக்திவேல் (35), வெங்டேசன் மகன் திருமூா்த்தி (25), சக்திவேல் மகன் கா்ணன் (22), சக்திவேல் (45), முனுசாமி மகன் கோவிந்தராஜ் (35) ஆகியோா் மணல் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.