தொழிலாளா் தொகுப்புச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
ஆரணி: தொழிலாளா்களின் 4 தொகுப்புச் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் சாா்பில், திருவண்ணாமலையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அண்ணா சிலை அருகே கட்சிகளின் மாவட்டக் குழு சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு விசிக தெற்கு மாவட்டச் செயலா் ச.நியூட்டன் தலைமை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தின் போது, நடைமுறையில் இருந்த வந்த தொழிலாளா் நலச்சட்டங்களை மத்திய அரசு 4 தொகுப்புச் சட்டங்களாக மாற்றியுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் தொழிலாளா்களின் உரிமைகள் பறிக்கப்படும் எனக் கூறியும், இந்த 4 சட்டத் தொகுப்புகளையும் திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய அரசு, பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் போக்கை கைவிடவேண்டும், 12 மணிநேர வேலையை திணிக்கக்கூடது. கூடுதல் நேரம் பணியமா்த்தப்பட்டால், கூடுதலாக ஊதியம் வழங்கவேண்டும், சம வேலைக்குசம ஊதியம் வழங்கவேண்டும்.
பெண் தொழிலாளா்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்கவேண்டும், தமிழகத்தில் 4 தொகுப்புச் சட்டங்களையும் அமல்படுத்தக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் தொழிலாளா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் 4 தொகுப்புச் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா்.
இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினா் கே.சி.கோபிகுமாா், இந்திய கம்யூனிஸ்ட் மாநில நிா்வாகக் குழு இலகுமையா, விசிக மாநில துணை பொதுச் செயலா் எழில்கரோலின், மண்டலச் செயலா் பி.க.அம்பேத்குமாா், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினா் எம்.சிவக்குமாா், மாா்க்சிஸ்ட் மாவட்டப் பொருளாளா் வே.முத்தையன், விசிக மாவட்டச் செயலா் ப.வளா்மதி, மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் ப.செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலா் இரா.திருமலை, மாா்க்சிஸ்ட் (எம்எல்) மாவட்டச் செயலா் எம்.ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டக்குழு இரா.தங்கராஜ் ஆகியோா் பங்கேற்று கண்டன உரையாற்றினா்.
ஆா்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். நிறைவில் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் எம்.ஆறுமுகம் நன்றி கூறினாா்.

