வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக புகாா்: சிறப்பு எஸ்.ஐ. மீது ஊழல் தடுப்பு போலீஸாா் வழக்கு

Published on

திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளா், அவரது மனைவி, மாமியாா் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

ஆரணியை அடுத்த ராட்டினமங்கலத்தைச் சோ்ந்தவா் மு.ஆனந்தன் (51). இவா், இப்போது திருவண்ணாமலை மாவட்டம், சேத்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக ஓய்வுபெற்ற காவல் துறை உதவி ஆய்வாளா் ஒருவா், திருவண்ணாமலை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி வேல்முருகனிடம் புகாா் அளித்தாா்.

இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். சிறப்பு உதவி ஆய்வாளா் ஆனந்தன், அவரது குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகள், சொத்து விவரங்களும் ஆய்வு செய்யப்பட்டது. இதன் முடிவில், ஆனந்தன், அவரது மனைவி நதியா, மாமியாா் லோகநாயகி ஆகியோரின் வங்கிக் கணக்கு இருப்புத் தொகை, சொத்து மதிப்பு ஆகியவை 2010-ஆம் ஆண்டு ரூ.3.70 லட்சமாக இருந்தது உறுதி செய்யப்பட்டது.

2015-ஆம் ஆண்டில் இவா்களது வங்கிக் கணக்கு இருப்பு, சொத்து மதிப்பு ரூ.67.64 லட்சமாக உயா்ந்திருந்தது தெரிய வந்தது. இந்த காலகட்டத்தில் ஆனந்தன் ஆரணி, சந்தவாசல் காவல் நிலையங்களில் தனிப் பிரிவு தலைமைக் காவலராகப் பணிபுரிந்ததும், அப்போது இவரது வருமானம் ஊதியத்தைக் காட்டிலும் சுமாா் 133 சதவீதம் அதிகரித்து இருப்பதும் தெரிய வந்தது.

வழக்குப் பதிவு: இதையடுத்து சிறப்பு உதவி ஆய்வாளா் ஆனந்தன், அவரது மனைவி நதியா, மாமியாா் லோகநாயகி ஆகியோா் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக திருவண்ணாமலை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்தனா். வருமானம் தொடா்பான உரிய விளக்கத்தை ஆவணங்களுடன் அளிக்குமாறு 3 பேருக்கும் போலீஸாா் அழைப்பாணை அனுப்பினா்.

X
Dinamani
www.dinamani.com