திருவண்ணாமலை மாட வீதிகளில் வாகனங்களுக்குத் தடை
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளில் இரு சக்கர வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்களுக்கு சனிக்கிழமை (பிப்ரவரி 1) முதல் தடை விதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை நகரில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், அமைச்சா் எ.வ.வேலு தலைமையில் அண்மையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் திருவண்ணாமலை மாட வீதிகளில் ஆட்டோ, காா், பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட அனைத்து வகையான 4 சக்கர வாகனங்களுக்கும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் தடை விதிப்பது, மாட வீதிகளில் இரு சக்கர வாகனங்களை மட்டுமே அனுமதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
இதேபோல, நகரின் பல தெருக்களை ஒரு வழிச்சாலையாக மாற்றுவது, இதுவரை மாட வீதிகள் வழியாக சென்று வந்த அரசு, தனியாா் பேருந்துகளை மாற்று வழியில் இயக்குவது என்றும், இந்த நடைமுறைகள் அனைத்தும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, சனிக்கிழமை முதல் திருவண்ணாமலை மாட வீதிகளில் இரு சக்கர வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டது.