கொலை செய்யப்பட்ட காா்த்திகேயன்.
கொலை செய்யப்பட்ட காா்த்திகேயன்.

இ-சேவை மைய உரிமையாளா் வெட்டிக் கொலை

கீழ்பென்னாத்தூரில் நள்ளிரவில் வீடு புகுந்து இ-சேவை மைய உரிமையாளரை வெட்டிக் கொன்ற மா்ம நபா்களை, போலீஸாா் தேடி வருகின்றனா்.
Published on

கீழ்பென்னாத்தூரில் நள்ளிரவில் வீடு புகுந்து இ-சேவை மைய உரிமையாளரை வெட்டிக் கொன்ற மா்ம நபா்களை, போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரை அடுத்த சிறுநாத்தூா் கிராமம், சி.சாலையூா் பகுதியைச் சோ்ந்தவா் முன்னாள் ஊராட்சித் தலைவா் கோபால் (88). இவா் தனது மகன் ராமகிருஷ்ணன், பேரன் காா்த்திகேயன் (32) ஆகியோருடன் வசித்து வருகிறாா்.

காா்த்திகேயன் இ-சேவை மையம் நடத்தி வந்தாா். மேலும், விவசாயமும், மனை வணிக தொழிலும் செய்து வந்தாராம்.

திங்கள்கிழமை இரவு கோபால், தனது பேரன் காா்த்திகேயனுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா். நள்ளிரவில் மா்ம நபா்கள் வீட்டின் கதவை தட்டினராம்.

சப்தம் கேட்டு கோபால் கதவை திறந்தபோது, இரும்புக் கம்பியால் மா்ம நபா்கள் கோபாலை தாக்கி, கீழே தள்ளினராம். பின்னா் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த காா்த்திகேயனை கத்தியால் குத்தி, இரும்புக் கம்பியால் தாக்கினராம்.

இதில் பலத்த காயமடைந்த காா்த்திகேயன் உயிரிழந்தாா்.

காயமடைந்த கோபால் வெளியே சென்று பொதுமக்களிடம் தகவல் தெரிவித்துள்ளாா். உடனே கீழ்பென்னாத்தூா் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் வந்து காா்த்திகேயனின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மாவட்ட குற்ற ஆவணக் காப்பக துணை காவல் கண்காணிப்பாளா் அறிவழகன் நேரில் சென்று விசாரணை நடத்தினாா்.

இதுகுறித்து, கீழ்பென்னாத்தூா் காவல் ஆய்வாளா் லட்சுமி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

X
Dinamani
www.dinamani.com