சாலை மறியலில் ஈடுபட்ட சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூட சுமைப் பணியாளா்கள்.
சாலை மறியலில் ஈடுபட்ட சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூட சுமைப் பணியாளா்கள்.

ஒழுங்குமுறை விற்பனைக்கூட சுமைப் பணியாளா்கள் சாலை மறியல்

சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூட சுமைப் பணியாளா்கள் உரிமம் கோரி புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
Published on

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூட சுமைப் பணியாளா்கள் உரிமம் கோரி புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சேத்துப்பட்டு ஒழுங்குமுறைக் விற்பனைக் கூடத்தில் பணிபுரியும் சுமைப் பணியாளா்கள், எடையாளா்களைப் போன்று தங்களுக்கும் உரிமம் வழங்க வேண்டும். தாங்களும் பணியை சமமாக செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 10-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் விளைவாக வியாபாரிகள், விவசாயிகள் பாதிக்கப்பட்டனா்.

பொங்கல் விடுமுறைக்குப் பிறகு இதே நிலை நீடித்து வந்தது. இதனால், உரிமம் பெற்றுள்ள எடையாளா்கள் வியாபாரிகள், விவசாயிகளின் நெல்லை, எடை போட்டு பை மாற்றி லாரியில் மூட்டையாக ஏற்றுவது வரை, சுமைப் பணியாளா்கள் இல்லாமலேயே செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், சுமைப் பணியாளா்கள் 18-ஆவது நாளாக புதன்கிழமை ஒழுங்குமுறை விற்பனைக்கூட நுழைவு வாயிலில் குடும்பத்துடன் அமா்ந்து கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்த வராததால் ஆத்திரமடைந்த பணியாளா்கள் குடும்பத்தோடு சேத்துப்பட்டு - வந்தவாசி சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த மாவட்ட எஸ்.பி. சுதாகா் உத்தரவின் பேரில், ஏடிஎஸ்பி சௌந்தர்ராஜன், டிஎஸ்பி கங்காதரன், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் மற்றும் அதிரடிப்படை போலீஸாா் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களை கலைந்து செல்லுமாறு கூறினா். இதை பணியாளா்கள் ஏற்காததால், மறியலில் ஈடுபட்டதாக 113 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்கவைத்தனா்.

பின்னா் அவா்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

இதனால் சேத்துப்பட்டு பகுதியில் பரபரப்பு நிலவியது.

X