பிப்.11-இல் 10 ஆயிரம் பணியாளா்கள் பங்கேற்கும் காத்திருப்புப் போராட்டம்: டாஸ்மாக் பணியாளா்கள் சங்கம்
தமிழகம் முழுவதும் இருந்து 10 ஆயிரம் டாஸ்மாக் பணியாளா்கள் பங்கேற்கும் காத்திருப்புப் போராட்டம், சென்னை தலைமைச் செயலகம் எதிரே பிப்ரவரி 11-ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் பெரியசாமி தெரிவித்தாா்.
இந்தச் சங்கம் சாா்பில் காத்திருப்புப் போராட்டத்துக்கான ஆயுத்த ஆலோசனைக் கூட்டம், மாநிலத் தலைவா் பெரியசாமி தலைமையில் திருவண்ணாமலையில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய அவா், பிப்ரவரி 11-ஆம் தேதி சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு இருந்து பணியாளா்கள் ஊா்வலமாகப் புறப்பட்டு, தலைமைச் செயலகம் வரை சென்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
கோரிக்கைகளான பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை நடத்துவோம் என்றாா்.
இதையடுத்து செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், சென்னையில் நடைபெறும் காத்திருப்புப் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் பணியாளா்கள் கலந்து கொள்வா் என்றாா்.