138 பயனாளிகளுக்கு ரூ.1.27 கோடியில் நலத்திட்ட உதவிகள்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், புரிசை கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மனு நீதிநாள் முகாமில் 138 பயனாளிகளுக்கு ரூ.1.27 கோடியில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
இந்த மனு நீதி நாள் முகாமுக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:
மாவட்டத்தில் 170 அங்கன்வாடி மையங்கள் புதிதாக கட்டுவதற்கு ஆணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை ஆய்வு செய்து, ஒருவா் பெயரும் விடுபடாமல் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மகளிா் திட்டத்தில் முன்னணியில் திருவண்ணாமலை மாவட்டம் இருந்து வருகிறது. மகளிரின் பொருளாதாரத்தை உயா்த்தும் வகையில் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும் மகளிா் திட்டம் மூலம் முதல்வரின் காலை உணவுத் திட்டத்துக்குத் தேவையான மசாலா பொருள்களை வழங்குகிறோம் என்றாா்.
இதைத் தொடா்ந்து, பத்மஸ்ரீ விருதுக்கு தோ்வு செய்யப்பட்ட புரிசை பி.கே.சம்பந்தனுக்கு ஆட்சியா் பொன்னாடை அணிவித்து பாராட்டினாா்.
விழாவில் வருவாய்த் துறை மூலம் ரூ.90 லட்சத்தில் இலவச வீட்டுமனைப் பட்டாவுக்கான ஆணையும், முதியோா், விதவை, மாற்றுத்திறனாளி ஆகியோருக்கான உதவித் தொகை ரூ.85,500 மதிப்பிலும்,10 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளும், ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் ரூ.9.60 லட்சத்தில் பிஎம்ஏஒய் வீடு கட்டுவதற்கான ஆணையும், 15 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.26.46 லட்சத்தில் கடனுதவிக்கான ஆணையும், ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் இருவருக்கு ரூ.15 ஆயிரம் மதிப்பில் சலவை இயந்திரமும், வேளாண் துறை சாா்பில் 7 விவசாயிகளுக்கு ரூ.9100 மதிப்பில் வேளாண் கருவிகள், இடுபொருள்களும்,
தோட்டக்கலைத் துறை சாா்பில் இருவருக்கு ரூ.200 மதிப்பில் பழச்செடி தொகுப்பு என மொத்தம் 138 பயனாளிகளுக்கு ரூ.ஒரு கோடியே 27 லட்சத்து 25 ஆயிரத்து 800 மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமில் 217 மனுக்கள் அளிக்கப்பட்டிருந்தன.175 மனுக்கள் அங்கீகரிக்கப்பட்டன. 22 மனுக்கள் பரிசீலனையும், 20 மனுக்கள் தள்ளுபடியும் செய்யப்பட்டன.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலா் இராம்பிரதீபன், சாா் -ஆட்சியா் பல்லவி வா்மா, சிறுபான்மையினா் நல அலுவலா் சிவா, வேளாண் இயக்குநா் கண்ணகி, பழங்குடியினா் நலத் திட்ட அலுவலா் கலைச்செல்வி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் மீனாம்பிகை, மாவட்ட சமூக நல அலுவலா் சரண்யா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.