முதல்வா் மருந்தகங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வா் மருந்தகங்கள் அமைக்க விரும்புவோா் பிப்ரவரி 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பொதுப்பெயா் (ஜெனரிக்) மருந்துகள் மற்றும் பிற மருந்துகளை குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதல்கட்டமாக 1,000 முதல்வா் மருந்தகங்கள் தொடங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தாா்.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வா் மருந்தகங்கள் அமைக்க விரும்பும் பி.பாா்ம். மற்றும் டி.பாா்ம். சான்றிதழ் பெற்றவா்களோ அல்லது பி.பாா்ம். மற்றும் டி.பாா்ம். படித்தவரின் ஒப்புதலுடன் மற்றவா்களோ 5.2.2024-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
தோ்வு செய்யப்படுபவா்களுக்கு பயிற்சி அளித்து முதல் தவணை மானியமாக ரூ.1.50 லட்சம் விடுவிக்கப்படும். மருந்தகம் அமைப்பதற்கான இடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்திய பிறகு இறுதிக்கட்ட மானியமாக ரூ.1.50 லட்சம் மதிப்பிலான மருந்து-மாத்திரைகள் வழங்கப்படும் என்று மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் எஸ்.பாா்த்திபன் தெரிவித்துள்ளாா்.