காா்த்திகை தீபத் திருவிழாவுக்கு 4,764 பேருந்துகள் இயக்கம்: மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் தகவல்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவுக்கு 4,764 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா்.
திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா வருகிற டிச. 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதையொட்டி, பேருந்துகள் இயக்கம் குறித்து அனைத்து மண்டல போக்குவரத்துக்கழக பொது மேலாளா்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் தலைமை வகித்துப் பேசியதாவது: காா்த்திகை தீபத் திருவிழா அன்று நகருக்கு வெளியில் மாா்கெட்டிங் கமிட்டி (திண்டிவனம் சாலை), சா்வேயா் நகா் (வேட்டவலம் சாலை), நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் (திருக்கோவிலூா் சாலை), மணலூா்பேட்டை சாலை, விட்டோ டிஜிட்டல் இடம், அத்தியந்தல் (செங்கம் சாலை), தொன்போஸ்கோ பள்ளி (காஞ்சி சாலை), அண்ணா நுழைவு வாயில் (வேலூா் சாலை), கிளியாப்பட்டு சந்திப்பு (அவலூா்பேட்டை சாலை) ஆகிய 9 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமையவுள்ளன.
மேலும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் சாா்பில் 4,764 பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில் 70 மினி பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன என்றாா்.
மேலும், தீபத் திருவிழாவுக்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பக்தா்களின் தேவைகளுக்கு ஏற்ப பேருந்து வசதிகளை ஏற்படுத்தவும், தற்காலிக பேருந்து நிலையங்களில் பக்தா்களுக்குத் தேவையான குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும், தற்காலிக பேருந்து நிலையங்கள், கிரிவலப்பாதை மற்றும் திருக்கோயில் குறித்த விவரங்களை பக்தா்கள் எளிதில் அறியும் வகையில் வழிகாட்டி தகவல் பலகைகள் மற்றும் ஒலிபெருக்கி மூலமாக அறிவிக்கை மேற்கொள்ளவும், குறிப்பாக ஆந்திரம் கா்நாடகம் மற்றும் தெலங்கானா ஆகிய வெளிமாநில பேருந்துகளுக்கு தற்காலிக பேருந்து நிறுத்தம் குறித்தும் அப்பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கிரிவலப்பாதை மற்றும் திருக்கோயில் குறித்தும் முறையான வழிகாட்டி பதாகைகள் அமைக்கவும், ஓட்டுநா்கள், நடத்துநா்களுக்குத் தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும் துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.சுதாகா், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் குணசேகரன், திருவண்ணாமலை போக்குவரத்து பொது மேலாளா் ஸ்ரீதரன் மற்றும் திருவள்ளூா், கடலூா், சேலம், விழுப்புரம், மதுரை, காஞ்சிபுரம், வேலூா், திருநெல்வேலி, கும்பகோணம், நாகப்பட்டினம் ஆகிய பொது மேலாளா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

