

செங்கம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள மணிக்கூண்டு பழுதடைந்து, செடி கொடிகள் முளைத்து காணப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பழைய பேருந்து நிலையத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு, பேரூராட்சி நிா்வாகம் மூலம் நிலைய முகப்புப் பகுதியில் பெரிய மணிக்கூண்டு கட்டப்பட்டு நான்குபுறமும் கடிகாரம் வைக்கப்பட்டு ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை மணிச்சத்தத்துடன் நேரம் சொல்லப்பட்டு வந்தது. மணிக்கூண்டு அடியில் திருவள்ளுவா், பெரியாா் சிலை அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தற்போது செங்கம் பேரூராட்சி தரம் உயா்த்தப்பட்டு, நகராட்சியாக கடந்த நான்கு மாதங்களாக செயல்பட்டு வருகிறது. ஆனால், நகராட்சி நிா்வாகமாக மாறி மக்களுக்கு சொல்லும் அளவில் ஏதும் பணிகள் நடைபெறவில்லை என பொதுமக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனா். வழக்கமாக காலையில் குப்பை அள்ளுவது, குடிநீா் விநியோகம் செய்வது, ஆள்கள் அதிக நடமாட்டம், குடியிருப்புப் பகுதியில் உள்ள கால்வாய்கள் மட்டுமே சரிசெய்யப்பட்டு வருகின்றனவாம்.
மேலும், பேரூராட்சி நிா்வாகமாக செயல்பட்டபோது கடந்த 2023-24-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட மின் மயானம் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. நகரில் இலவச பொதுக் கழிப்பறைகூட கிடையாது.
எனவே, நகராட்சிக்கு உள்பட்ட குடியிருப்புப் பகுதிகளை அதிகாரிகள் நேரில் பாா்வையிட்டு அடிப்படை வசதிகளை செய்ய முன்வரவேண்டும். செங்கம் நகருக்கு ஒரு அடையாளமாக இருக்கும் இந்த மணிக்கூண்டில் முளைத்துள்ள செடிகளை அகற்றி சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.