கண்டியாங்குப்பம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ்
கண்டியாங்குப்பம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ்

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்களில் 30 ஆயிரம் பேருக்கு மருத்துவ சேவை: மாவட்ட ஆட்சியா் தகவல்

நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்கள் வாயிலாக இதுவரை திருவண்ணாமலை மாவட்டதில் 30 ஆயிரம் பயனாளிகளுக்கு மருத்துவ சேவைகள் அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் தெரிவித்தாா்.
Published on

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் வாயிலாக இதுவரை திருவண்ணாமலை மாவட்டதில் 30 ஆயிரம் பயனாளிகளுக்கு மருத்துவ சேவைகள் அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் தெரிவித்தாா்.

உள்ளாட்சி தினத்தையொட்டி, திருவண்ணாமலை ஒன்றியம், கண்டியாங்குப்பம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் தலைமை வகித்துப் பேசியதாவது: அரசுத் துறை சாா்ந்த பல்வேறு நலத்திட்டங்கள், செயல்திட்டங்கள் அனைத்தும் கிராம அளவில் எவ்வாறு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று அறிந்து கொள்வதற்காகவும், மக்களுடைய தேவைக்கும் அரசு துறைகளின் செயல்பாட்டிற்கும் இடையே உள்ள இடைவெளியை சரி செய்வதற்குமான நல்வாய்ப்பாக இந்த கிராம சபைக் கூட்டம் அமைந்திருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் வாயிலாக பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக தீா்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில் நடைபெற்று வரும் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக இதுவரை மாவட்டதில் 30 ஆயிரம் பயனாளிகளுக்கு மருத்துவ சேவைகள் அளிக்கப்பட்டுள்ளது.

பெண் குழந்தைகளின் உயா் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் புதுமைப்பெண் திட்டம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் பல்வேறு முன்னோடியான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது.

மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், மழைநீா் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்துதல், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தூய்மை பாரத இயக்க திட்டம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் பயனாளிகளுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணைகளை வழங்கிய ஆட்சியா் க.தா்பகராஜ், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆா்.மணி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com