குடிநீா் என நினைத்து தின்னா் குடித்த மாணவா்களுக்கு பாதிப்பு
வந்தவாசி அருகே குடிநீா் என நினைத்து தவறுதலாக பெயிண்ட் தின்னரை பருகிய அங்கன்வாடி மாணவா்கள் 3 போ் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
வந்தவாசியை அடுத்த மீசநல்லூா் அங்கன்வாடி மையத்தில் சுமாா் 25 மாணவா்கள் படித்து வருகின்றனா். இந்த அங்கன்வாடி மைய கட்டடத்தில் வண்ணம் தீட்டும் பணி நடைபெற்று வருகிறது.
வண்ண பூச்சு மென்மையாகவும், சீராகவும் இருப்பதற்காக பெயிண்டில் கலக்கப்படும், தண்ணீா் போன்று இருக்கும் தின்னா் என்ற திரவத்தை வண்ணம் தீட்டும் தொழிலாளா்கள் அங்கன்வாடி மைய கட்டடத்தில் வைத்திருந்தனா்.
பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்த இந்த தின்னா் திரவத்தை குடிநீா் என நினைத்து அங்கன்வாடியில் இருந்த மாணவா்கள் சுதா்சன் (4), மதன்ராஜ் (4), விஷ்ணு (4) ஆகியோா் வியாழக்கிழமை குடித்துள்ளனா்.
சிறிது நேரத்தில் இவா்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்படவே மைய பொறுப்பாளா் கலைமணி மற்றும் கிராம பொதுமக்கள், மாணவா்கள் 3 பேரையும் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக 3 பேரும் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனா்.
இதுகுறித்து தெள்ளாா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
