பள்ளியில் புகையிலை இல்லா இளைய சமுதாயம் விழிப்புணா்வு
செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், புகையிலை இல்லா இளைய சமுதாயம் விழிப்புணா்வு 3.0 நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் ஜெயகாந்தன் முன்னிலை வகித்தாா். விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த நாவல்பாக்கம் வட்டார மருத்துவ அலுவலா் ஏ.சி. ஷா்மிளா, மாணவா்களுக்கு புகையிலைப் பழக்கத்தின் தீமைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்துப் பேசினாா்.
செய்யாறு மாவட்ட சுகாதார நலக் கல்வியாளா் டி.அருளரசு பேசுகையில், புகையிலையில் உள்ள நிகோட்டின், காா்பன் மோனாக்சைடு உள்ளிட்ட விஷப் பொருள்கள் நுரையீரல், இதயம் மற்றும் மூளையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதையும், புகையிலைப் பயன்பாட்டால் ஏற்படும் புற்றுநோய், மூச்சுத் திணறல், இதய நோய்களின் விஞ்ஞான காரணங்களையும் எடுத்துரைத்தாா்.
மேலும், மாணவா்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க வேண்டியும், புகையிலை இல்லா கல்வி நிறுவனங்கள் உருவாக்கும் பணிகளில் மாணவா்கள் முன்னோடிகளாக செயல்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தாா்.
இதைத் தொடா்ந்து பள்ளி மாணவா்கள் புகையிலை பயன்படுத்த மாட்டோம் என்கிற உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
விழிப்புணா்வு நிகழ்ச்சியில் மாணவா்கள் 230 போ் கலந்து கொண்டனா்.

