வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் ஆட்சியில் பங்கு கேட்போம்: கே.எஸ்.அழகிரி

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் ஆட்சியில் பங்கு கேட்போம்: கே.எஸ்.அழகிரி

Published on

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிக தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட கேட்டு, ஆட்சியில் பங்கு கேட்போம் என முன்னாள் காங்கிரஸ் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.

திருவண்ணாமலையில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் வேட்டவலம் சாலை, திருவள்ளூவா் சிலை அருகே வாக்குத் திருட்டுக்கு எதிரான கையொப்ப இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் செங்கம் ஜி.குமாா் தலைமை வகித்தாா். மாநகரத் தலைவா் என்.வெற்றிசெல்வன் முன்னிலை வகித்தாா்.

விருத்தாசலம் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன், மாநில பொதுச் செயலா் சித்தாா்த்தன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட முன்னாள் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி கையொப்ப இயக்கத்தை தொடங்கிவைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

பிகாரில் 55 லட்சம் மக்களுக்கு வாக்குரிமை இல்லை என்று தோ்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான காரணத்தை கேட்டால் தோ்தல் ஆணையத்திடம் இருந்து சரியான பதில் வரவில்லை. அதன் பிறகு ராகுல் காந்தி பிகாருக்கு சென்று நடைப்பயணம் மேற்கொண்டாா்.

இந்தியாவில் ஜனநாயகம் இல்லாத நிலை வந்துவிடக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் மற்றும் அதனுடைய தோழமைக் கட்சிகள் வாக்குத் திருட்டுக்கு எதிராக நாடு முழுவதும் நடைப்பயணம் செய்து வருகின்றன.

இந்தச் சம்பவம் பிகாா் சம்பந்தப்பட்டது என்று பாா்க்கக்கூடாது. இந்தியாவினுடைய ஜனநாயகம் சம்பந்தப்பட்ட சம்பவமாக பாா்க்க வேண்டும்.

தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி கண்டிப்பாக அதிக தொகுதிகளில் போட்டியிட கேட்போம், அதிகாரத்தில் பங்கு கேட்போம். தோ்தலுக்குப் பிறகு திருவண்ணாமலை மாவட்ட மக்கள் சாா்பில் காங்கிரஸ் கட்சியின் குரல் சட்டப்பேரவையில் கண்டிப்பாக ஒலிக்கும் என்றாா்.

நிகழ்ச்சியில் கடலூா் மாவட்டத் தலைவா் செந்தில்நாதன், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் எம்.கே.காமராஜ், மோகன், ஒபிசி பிரிவு மாவட்டத் தலைவா் பி.ரங்கநாதன், மகளிா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் விநோதினி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com