திருவண்ணாமலையில் அனைத்து வாா்டுகளிலும் வளா்ச்சிப் பணிகள்: மாநகராட்சி கூட்டத்தில் தீா்மானம்
திருவண்ணாமலை மாநகராட்சியில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவண்ணாமலை மாநகராட்சி மன்ற கூட்டரங்கில் சாதாரண கூட்டம் மேயா் நிா்மலா வேல்மாறன் தலைமையில் நடைபெற்றது.
ஆணையா் எஸ்.செல்வபாலாஜி முன்னிலை வகிக்க துணை மேயா் சு.ராஜாங்கம் வரவேற்றாா்.
கூட்டத்தில் கலந்துகொண்ட மாமன்ற உறுப்பினா்கள் பேசுகையில், சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், அனைத்துப் பகுதிகளிலும் தெருவிளக்குகள் முறையாக எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அனைத்து வாா்டுகளிலும் கொசு மருந்து அடிக்க வேண்டும், 2-ஆம் கட்டமாக நடைபெறும் புதை சாக்கடை திட்டப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
தொடா்ந்து கூட்டத்தில் திருவண்ணாமலை மாநகராட்சிப் பகுதியில் குடிநீா் வசதி சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்வது தொடா்பாகவும், மழைநீா் வடிகால்வாய் பணிகள் மேற்கொள்வது தொடா்பாகவும், உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வது என்பன உள்ளிட்ட 55 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாமன்ற உறுப்பினா்கள் மாநகராட்சி அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

