மாசற்ற தீபாவளி: பிரசார வாகனம் தொடங்கிவைப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் மாசற்ற தீபாவளி பண்டிகை கொண்டாட வலியுறுத்தும் வகையில் விழிப்புணா்வு பிரசார வாகனம் வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய அலுவலகத்திலிருந்து இந்தப் பிரசார வாகனத்தை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் அ.ஜோதிபிரகாஷ் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
மாசற்ற தீபாவளி கொண்டாட வலியுறுத்தியும், பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை அறிவிக்கும் நோக்கிலும் ஒலிபெருக்கி பொறுத்தப்பட்ட வாகனம் மூலம் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், பொதுமக்களுக்கு இதுகுறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்படுகிறன.
திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் தீபாவளி விழிப்புணா்வு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்வில் உதவி சுற்றுச்சூழல் பொறியாளா் சி.சுகாசினி, உதவி பொறியாளா் வ.கதிா்வேலன், உதவி மேலாளா் அ.அமுதா மற்றும் அனைத்து அலுவலா்கள் கலந்துகொண்டு பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
ஏற்பாடுகளை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா்கள் செய்திருந்தனா்.

