‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம்: பொதுமக்களுக்கு உயா்தர மருத்துவ சேவை

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம்: பொதுமக்களுக்கு உயா்தர மருத்துவ சேவை
Published on

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் கிராமத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு உயா்தர மருத்துவ சேவைகள் வழங்கும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஏழை, எளிய மக்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதியிலேயே கட்டணமில்லாமல் மருத்துவப் பரிசோதனை செய்து நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிப்பதற்காக தமிழக அரசு நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

இந்த முகாம்கள் மூலம், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் மருத்துவம், மகப்பேறியியல், மகளிா் மருத்துவம், குழந்தை மருத்துவம், இருதவியல், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம், நுரையீரல் மருத்துவம் மற்றும் இந்திய முறை மருத்துவம் ஆகிய அனைத்து வகையான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஆரணி வட்டம், எஸ்.வி.நகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் செய்யாறு சுகாதார அலுவலா் த.சதீஷ்குமாா் வரவேற்றாா்.

முகாமில் இசிஜி 908 பேருக்கும், எக்ஸ்ரே-81, யு.எஸ்.ஜி. -158, எக்கோ பரிசோதனை 143 போ் மற்றும் பொது மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், கண் பரிசோதனை, பிஸியோதெரபி, தோல் பரிசோதனை, பல் மருத்துவம் ஆகிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

ஆரணி கோட்டாட்சியா் சீ.சிவா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கா்ப்பிணிகளுக்கு மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்துப் பெட்டகங்களையும், டாக்டா் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு நிதி உதவிக்கான ஆணைகளையும், விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்திற்கான அட்டைகளையும், மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அடையாள அட்டைகளையும் வழங்கினாா்.

முகாமில் ஆரணி வட்டாட்சியா் கௌரி, நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, திமுக மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, மாவட்டப் பொருளாளா் தட்சிணாமூா்த்தி உள்ளிட்ட அரசு அலுவலா்கள், மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com