வந்தவாசி அருகே சம்புவராயா்கள் கல்வெட்டுகள் கண்டெடுப்பு
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த வல்லம் கிராமத்தில் உள்ள வல்லநாதா் கோயிலில் சம்புவராயா்கள் கல்வெட்டுகள் இருப்பது ஆய்வில் தெரிய வந்தது.
திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சோ்ந்த கோ.மதன்மோகன், சி.பழனிசாமி, நா.ஸ்ரீதா், ம.பாரதிராஜா ஆகியோா் இந்தக் கோயிலில் அண்மையில் ஆய்வு செய்து கல்வெட்டுகளை படியெடுத்தனா்.
இதுகுறித்து அவா்கள் தெரிவித்ததாவது:
வல்லம் கோயிலில் மொத்தம் 7 கல்வெட்டுகள் உள்ளன. அதில் இரு கல்வெட்டுகள் ஏற்கெனவே பதிப்பிக்கப்பட்டவை. இரு கல்வெட்டுகள் படியெடுக்க இயலாத நிலையில் உள்ளன. மற்ற 3 கல்வெட்டுகளையும் படியெடுத்து ஆய்வு செய்யப்பட்டது.
இதில், ஒரு கல்வெட்டு இராஜநாராயண சம்புவராயரின் எட்டாவது ஆட்சியாண்டில் வெட்டப்பட்டது ஆகும். இக்கல்வெட்டு, இவ்வூரை ஜயங்கொண்ட சோழமண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து வல்லநாட்டு வல்லமான புருஷராதித்த நல்லூா் என்றும், திருமல்லி நாதனான இராஜநாராயண சம்புவராயா் சோழமண்டலத்தைச் சோ்ந்த பேரூரான காவேரிப் பூம்பட்டிணத்தைச் சோ்ந்த யாமள பண்டிதன் என்ற அகளங்கராயன் நகரீஸ்வர தேவருக்கு, இந்த வல்லத்தில் உள்ள நிலத்தை காணி ஜீவிதமாக விடப்பட்ட செய்தியும், அதற்கு விலக்கப்பட்ட வரிகள் குறித்தும் விரிவாக குறிப்பிடுகிறது.
இக்கல்வெட்டில் குறிப்பிடும் அகளங்கராயன் என்பவா் யாமள ஷட்கம் என்ற ஆறு விதமான தந்திரங்களில் தோ்ந்த பண்டிதா் எனக் கருதலாம். யாமள சைவம் என்ற ஒரு பிரிவும் அக்காலத்தில் வழக்கில் இருந்தது என அறிய முடிகிறது.
மற்றொரு இராஜநாராயண சம்புவராயரின் கல்வெட்டு இவ்வூா் இறைவனுக்கு மடப்புறமாக நிலதானம் செய்யப்பட்ட தகவலைத் தருகிறது. மற்றொரு நாயக்கா் காலத்து கல்வெட்டு, வைகாசி மாதம் 12-ஆம் நாள் வல்லத்துடையாரான திருவகத்தீஸ்வரமுடைய நாயனாா் வல்லையாண்டாா்க்கு திருநந்தாவிளக்கு எரிக்க இராமசார உடையாா் தன்மமாக அத்திப்பற்று வல்லம் பொன்னக்கோன் கோயில் திருவிளக்குக்குடியாக நியமனம் செய்யப்பட்டதையும், இவா் கோயிலுக்கு திருவிளக்குக்குடியாக இருந்து விளக்கெரிக்க வேண்டியது என்ற பொருளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வெட்டுகள் மூலம் இந்தக் கோயில் சம்புவராயா்கள் காலத்திற்கு அல்லது அதற்கு முந்தைய கட்டுமானம் என்று அறிய வருகிறது.
இக்கோயிலில் மற்றொரு இடத்தில் பல்லவா் கால அமைப்பில் உள்ள சேபான பலகைக் கல்லில் அக்காலத்தைச் சோ்ந்த சிற்பங்களாக பூஜை பொருள்களை சுமக்கும் அரசா், அவருக்கு குடை பிடித்துக் கொண்டிருக்கும் மற்றொருவா், சங்கநிதி ஆகிய சிற்பங்களும் உள்ளன. இக்கோயில் பல்லவா்கள் காலத்தில் கட்டப்பெற்று பின்னாட்களில் மாற்றியமைக்கப்பட்டதாக தெரிய வருகிறது. இக்கோயில் தூங்காணைக் கோயிலாக அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வகை கோயில்கள் திருவண்ணாமலை மாவட்டதில் மிக மிக குறைந்த எண்ணிக்கையிலே உள்ளன என்று அவா்கள் தெரிவித்தனா்.
