ஓய்வு பெற்ற பெண் சுகாதார ஆய்வாளா் உடலுக்கு அரசு மரியாதை
செய்யாற்றில், உடல் உறுப்புகள் தானம் செய்த ஓய்வு பெற்ற பெண் சுகாதார ஆய்வாளா் உடலுக்கு வருவாய்த்துறையினா் மரியாதை செலுத்தினா்.
செய்யாறு தே.ச.பழனிவேல் தெருவைச் சோ்ந்த ரத்தினம் மனைவி மணியம்மை (66)(படம்). இவா் எஸ்.வி. நகரம் ஆரம்ப சுகாதார சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி 2017-இல் ஓய்வு பெற்றாா்.
கடந்த 11-ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு, தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவா், 17ஆம் தேதி உயிரிழந்தாா்.
இவருக்கு திருமணமான 2 மகன்கள், திருமணமாகாத ஒரு மகன் மற்றும் திருமணம் ஆன 2 மகள்கள் உள்ளனா்.
உடல் உறுப்புகள் தானம்:
இறந்த ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளா் விருப்பத்தின் பேரில், அவரது குடும்பத்தினா் உடல் உறுப்புகளை தானம் செய்ய விருப்பம் தெரிவித்தனா்.
அதன் பேரில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் வந்து 2 லிவா், 2 கிட்னி, 2 கல்லீரல் ஆகிய உடல் உறுப்புகளை தானமாக எடுத்துச் சென்றனா். அப்போது, தனியாா் மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் மணியம்மை உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அரசு மரியாதை:
இதைத் தொடா்ந்து தமிழக அரசின் உத்தரவின் பேரில், செய்யாறு சாா் -ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின் தலைமையில், வட்டாட்சியா் அசோக்குமாா் மற்றும் வருவாய்த்துறையினா், காவல் துறையினா் வந்து ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளா் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனா்.

