~ ~

தொடா் மழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, தாழ்வான இடங்களில் தண்ணீா் தேக்கம்

Published on

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை முதல் புதன்கிழமை வரை பெய்த தொடா் மழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான இடங்களில் தண்ணீா் தேங்கியுள்ளது.

ஆரணி கமண்டல நாக நதியில் இருகரைகளையும் தொட்டவாறு வெள்ளம் செல்வதால் ஆரணி பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

அமிா்தி மலைப் பகுதியில் பலத்த மழை காரணமாக கண்ணமங்கலம் நாக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், படவேடு மலைப் பகுதியில் பலத்த மழை காரணமாக செண்பகத்தோப்பு அணையில் இருந்து தண்ணீா்

வெளியேற்றப்படுகிறது. இந்தத் தண்ணீரால் கமண்டல நாக நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இரு கரைகளையும் தொட்டு தண்ணீா் செல்கிறது.

பொதுமக்கள் சென்று கமண்டல நாக நதியை பாா்த்து ரசித்து வருகின்றனா்.

ஆரணி புதுக்காமூா் சாலையில் உள்ள கே.சி.கே. நகா் பகுதியில் பலத்த மழை காரணமாக குளம்போல் தண்ணீா் தேங்கி, பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனா்.

வந்தவாசி

வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் புதன்கிழமை காலை வரை விட்டுவிட்டு பலத்த மழை பெய்தது.

வந்தவாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள அம்மையப்பட்டு, மருதாடு, மாம்பட்டு, கீழ்க்குவளைவேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடந்த சில நாள்களாக விட்டுவிட்டு மழை பெய்து வந்தது.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. புதன்கிழமை காலை வரை விட்டுவிட்டு மழை பெய்தது.

இந்த மழையினால் வந்தவாசி நகரில் தேரடி, பெட்டிநாயுடு தெரு விரிவு உள்ளிட்ட பகுதி தெருக்களில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் மழைநீருடன் கால்வாய் கழிவுநீா் கலந்து தெருக்களில் தேங்கியது.

X
Dinamani
www.dinamani.com