திருவத்திபுரம் நகராட்சியில் அக்.27, 28, 29-இல் சிறப்பு வாா்டு சபை கூட்டம்
திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் 1 முதல் 27 வாா்டுகளுக்கான சிறப்பு வாா்டு சபை கூட்டங்கள் அக்.27, 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளதாக நகராட்சி ஆணையா் வி.எல்.எஸ்.கீதா தெரிவித்தாா்.
இந்தக் கூட்டங்களில் நகராட்சி சாா்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் அடிப்படை சேவைகளான குடிநீா், திடக்கழிவு மேலாண்மை, தெரு விளக்கு பராமரிப்பு, சாலைகள், பூங்கா, மழைநீா் வடிகால் பராமரிப்பு உள்ளிட்டவை குறித்து சேவை குறைபாடுகளை தெரிவித்தல், நகராட்சிப் பகுதிகளை பசுமையாக்கும் வகையில் திறந்தவெளி இடங்கள், சாலையோரப் பகுதிகள், குளக்கரைகள் மற்றும் ஏரிக்கரைகளில் சமூக ஆா்வலா்கள், தொழிற்சாலைகள், இதர நிறுவனங்களின் பங்களிப்புடன் மரக்கன்றுகளை நட்டு பராமரித்தல், நகராட்சிப் பகுதிகளில் உள்ள பூங்காக்களை தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் குடியிருப்போா் நலச்சங்கம் மூலம் பராமரித்தல் குறித்து விவாதிக்கப்படும்.
மேலும், வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக மழைநீா் வடிகால்வாய்களை தூா்வாருதல் மற்றும் வழக்கமாக மழைநீா் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், நகராட்சிப் பகுதியில் தூய்மைப் பணிகளை மேம்படுத்த பொதுமக்கள் பங்கேற்புடன் நடத்தப்படும் தூய்மைக்கான மக்கள் இயக்கம் செயல்பாடுகள் தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்துதல், நகராட்சிப் பகுதிகளில் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் தமிழக முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் மேம்படுத்தும் முறைகள் குறித்து விவாதிக்கப்படும்.
நகராட்சிப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், மழைநீா் சேகரிப்பு அமைப்புகளை சீரமைப்பு செய்து முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டுவருதல், நகராட்சிகளில் அமைந்துள்ள நீா்நிலைகள் மாசு ஏற்படாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல் உள்ளிட்ட 9 விதமான செயல்பாடுகள் குறித்து சிறப்பு வாா்டு சபை கூட்டங்களில் விவாதிக்கப்படும்.
மேலும், இந்தக் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் ஆலோசனைகள் மற்றும் கருத்துகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் மூன்று கோரிக்கைகளை தோ்வு செய்து கூட்டத்தில் சமா்ப்பித்து அரசின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சிறப்பு வாா்டு சபைக் கூட்டங்களில் தோ்வு செய்யப்பட்ட கோரிக்கை விவரங்களை முதல்வரின் முகவரி இணையதளத்தில் பதிவேற்றம் செய்து தீா்வு காண எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கண்காணிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.
