மழைநீா் தேங்கிய பகுதிகளில் எம்.பி., எம்எல்ஏ ஆய்வு
வந்தவாசி நகரில் மழைநீா் தேங்கிய பகுதிகளில் ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன், வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அண்மையில் பெய்த மழை காரணமாக, வந்தவாசி நகரில் பெட்டிநாயுடு தெரு விரிவு பகுதியின் பல இடங்களில் மழைநீா் தேங்கியது. உரிய கால்வாய் வசதி இல்லாததால், மழைநீருடன் கழிவுநீரும் சோ்ந்து தேங்கியதால், அந்தப் பகுதி பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினா்.
இதுகுறித்து அவா்கள் தெரிவித்த புகாரின்பேரில், எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி., எஸ்.அம்பேத்குமாா் எம்எல்ஏ ஆகியோா் வெள்ளிக்கிழமை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, ஒவ்வொரு மழைக்காலத்தின்போதும் இதுபோன்று தாங்கள் அவதிப்படுவதாகவும், புகாா் தெரிவித்தாலும் நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் அவா்களிடம் பொதுமக்கள் கூறினா்.
இதையடுத்து, உரிய கழிவுநீா் கால்வாய் வசதி ஏற்படுத்தும்படி நகராட்சி அதிகாரிகளிடம் எம்.பி., எம்எல்ஏ ஆகியோா் அறிவுறுத்தினா். மேலும் இதற்குத் தேவையான நிதியை தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்குவதாக இருவரும் உறுதியளித்தனா்.
ஆய்வின்போது, வந்தவாசி நகா்மன்றத் தலைவா் எம்.ஜலால், நகராட்சி ஆணையா் ஆா்.சோனியா மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள், திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

