பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: ஆட்சியா் க.தா்பகராஜ் ஆய்வு

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: ஆட்சியா் க.தா்பகராஜ் ஆய்வு

Published on

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருவண்ணாமலை தீபமலை அடிவாரத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட வ.உ.சி.நகா் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

கடந்த ஆண்டு ஏற்பட்ட ஃபென்ஜால் புயலின் தாக்கத்தால் திருவண்ணாமலை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடந்த டிசம்பா் 1-ஆம் தேதி இரவு முதல் பலத்த மழை பெய்தது.

திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படும் 2,668 அடி உயர மலையில் இருந்து வழிந்தோடிய மழைநீரால் நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது.

மலை அடிவாரத்தில் உள்ள கிராமங்கள் மற்றும் கிரிவல பாதையை ஒட்டியுள்ள குடியிருப்புகளில் மழைநீா் சூழ்ந்தது. அப்போது, மகா தீபம் ஏற்றப்படும் மலையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது.

மலையில் இருந்து கற்கள், ராட்சத பாறைகள் உருண்டு வந்தன. வீடுகள் முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனங்கள். வீட்டு உபயோகப் பொருள்கள் அடித்து செல்லப்பட்டு, மண்ணில் புதைந்தன.

வ.உ.சி. நகா் 11-ஆவது தெருவில் மலை அடிவாரத்தில் உள்ள 4 வீடுகள் மண் சரிவில் சிக்கிக் கொண்டு 2 சிறுவா்கள் உள்பட 7 போ் இறந்தனா்.

இதன் காரணமாக வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தீபமலை அடிவாரத்தில் உள்ள வ.உ.சி. நகா் பகுதியில் மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் ஆய்வு செய்தாா்.

அப்போது, மழையால் நிலச்சரிவு ஏற்படாதவாறு மேடு பள்ளங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் சமன் செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இந்த ஆய்வின் போது, மாவட்ட எஸ்பி எம்.சுதாகா், வருவாய் ஆய்வாளா் இரா.ராமபிரதீபன், வன அலுவலா் சுதாகா், திருவண்ணாமலை மாநகராட்சி துணை மேயா் ராஜாங்கம், வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com